குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்ததும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி வருகிறது. நாளுக்கு நாள் புதுப்புது குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு எதிராக கிளம்பிக் கொண்டு இருக்கின்றன.
சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மன்மோகன்சிங் தலைமையிலான அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பது தெரியவந்தது. அதே சமயம், பாரதீய ஜனதாவுக்கு பலம் கூடியிருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.
எந்த சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் 32 சதவீதத்துக்கு மேல் ஓட்டுக்களை பெற்று பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள பாரதீய ஜனதா கட்சி, மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்கான புதிய வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. அதன் ஒரு திட்டம்தான் அத்வானியின் ரதயாத்திரை என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாஜ்பாய் மற்றும் அத்வானி அளவிற்கு மக்கள் மத்தியிலும் பரவலாக ஆதரவு பெற்ற தலைவர்கள் பாரதீய ஜனதாவில் யாரும் கிடையாது. வரும் 2014-ம் ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரபலமான ஒருத்தரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா தலைவர்கள் விரும்புகின்றனர்.
அத்வானியை முன்னிறுத்தலாம் என்றால் பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார். அத்வானிக்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்கு பெற்ற தலைவர் என்று பார்த்தால் முதலில் வருபவர் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிதான். நேர்மையான, வெளிப்படையான ஆட்சியின் மூலம் அறியப்படுபவர் அவர். இவரது திறமையை அமெரிக்க பாராளுமன்ற குழுவே அங்கீகரித்துள்ளது.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக குஜராத்தை உயர்த்தி உள்ளார். கோத்ரா சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட கலவரத்தை தடுக்க தவறினார் என்று இவருக்கு எதிராக கூறப்பட்டு வந்த பழிக்கு, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவு நிவாரணமாக அமைந்துள்ளது. இதுவும், ஊழலுக்கு எதிராக மேற் கொண்ட 3 நாள் உண்ணாவிரத போராட்டமும் நரேந்திர மோடிக்கு நன் மதிப்பையும், செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்துள்ளன.
நரேந்திரமோடிக்கு கூடிவரும் செல்வாக்கை சரியாக பயன்படுத்திக் கொள்ள பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவரை அறிவிப்பது பற்றி கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.
அத்வானி உள்ளிட்ட மேல்மட்ட தலை வர்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவாக உள்ளனர். எனினும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் இருப்பதால், அவசரப்பட்டு இப்போது அறிவிக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது. குஜராத் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
நரேந்திர மோடியை முன்னிறுத்திதான் சட்டமன்ற தேர்தலை பாரதீய ஜனதா சந்திக்க இருக்கிறது. நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தினால் தான் குஜராத்தில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, குஜராத் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று மேல்மட்ட தலைவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
குஜராத் தேர்தல் முடிந்ததும், பாரதீய ஜனதா கட்சி யின் உயர்மட்ட குழு கூடி நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முறைப்படி தேர்ந்த எடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடிக்கும், மாநில அரசியல் போரடித்து விட்டது. தேசிய அரசியலுக்கு வர அவர் விரும்புகிறார். குஜராத் தேர்தலில் ஹாட்ரிக் சாதனை படைப்பாரேயானால் நரேந்திர மோடியின் தேசிய அரசியல் ஆசைக்கு யாராலும் அணை போட முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அத்வானி மறுக்கும் நிலையில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆர்.எஸ்.எஸ். மற்றும் துணை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.