நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 29 செப்டம்பர், 2011

'பொடி வைத்துப் பேசவில்லை' என்று சொல்லிக் கொண்ட 'பொடி வைத்த' விஜயகாந்த்!

வேலூர்: கம்சனை (திமுக ஆட்சியை) அழிக்க ஒன்று சேர்ந்தோம். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். இப்போது, இப்படிப்பட்ட தொண்டர்களை (தேமுதிகவை) விட்டு விட்டோமே என்று ஒவ்வொருவரும் (முதல்வர் ஜெயலலிதா) நினைக்க வேண்டும். இதனால் ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'பொடி வைத்துப்' பேசினார்.

வேலூர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதாவை ஆதரித்து மண்டித்தெருவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து பேசுகையில்,


உள்ளாட்சி என்பது உங்கள் ஆட்சி, உள்ளாட்சி என்பது நம்ம ஊர் பிரச்சனை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் உள்ளாட்சி என்றால் மக்கள் ஆட்சி. இதில் ரோடு வசதி, சுகாதார வசதி, பஸ் வசதி ஆகிய பிரச்சனைகள் இருக்கும். ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் நிதி இருக்கும், அதை கொண்டு செயல்படுத்தலாம்.

ஆனால், நாடு சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரோடு பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகள் எல்லாம் உள்ளது. அதைப் பற்றி கவலைப்படாமல் ஒருத்தர் காட்பாடி பாலாற்றில் மணல் கொள்ளை அடித்து வருகிறார். வேலூர் பஸ் ஸ்டாண்டில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.

அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா?, நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். விஜயகாந்த் தனியாக வந்து பேசுவதாக நினைக்காதீர்கள். தெய்வம் எப்போதும் நேரில் வராது, மக்கள் ரூபத்தில்தான் வரும்.

கம்சனை அழிக்க ஒன்று சேர்ந்தோம். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். இப்போது, இப்படிப்பட்ட தொண்டர்களை விட்டு விட்டோமே என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

தேமுதிகவுக்கு முன்பு ஒரு எம்.எல்.ஏ, இப்போது, 29 எம்.எல்.ஏக்கள். முன்பு, 71வது கட்சி, இப்போது, 1வது கட்சியாகி விட்டது.

நாளை நாம் தான் தலைவன். நான் பொடி வைத்துப் பேசவில்லை. உங்களுக்கு புரிய வேண்டும் என்றுதான் பேசுகிறேன். நான் கேள்வி கேட்பேன், நான் யாருக்கும் பயந்தவன் கிடையாது.

தமிழகத்தில், 63 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால், காசு வாங்கிக் கொண்டுதான் கல்லூரிகளில் சீட் கொடுக்கின்றனர். படித்துவிட்டு வேலை இல்லாததால்தான், புரட்சி வெடிக்கிறது.

நாங்கள் யாரையும் லஞ்சம் வாங்க விட மாட்டோம். எனக்கு லஞ்சம் தேவையில்லை, உள்ளாட்சி அமைப்புகளில் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள். நன்றி மறவாத நல்ல உள்ளம் வேண்டும். அது எங்களிடம் உள்ளது.

எங்களை வெற்றி பெற வைத்தால், தவறுகள் நடக்காது. எத்தனை காலம்தான் நீங்கள் ஏமாந்து கொண்டிருப்பது?. இந்த சந்தர்ப்பத்தை விட்டால், வேறு சந்தர்ப்பம் வராது.

கடந்த முறை, ஜாதியை சொல்லி தன் மகனை மந்திரியாக்கிவர், எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்?. அவங்க ஜாதியைச் சேர்ந்தவர்களுக்காவது வேலை கொடுத்தார்களா?, மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தந்தார்களா?, அவர்கள் வளர்ச்சியைத்தான் பார்த்துக் கொண்டனர்.

அவர்களுக்காக, சாலை மறியல் செய்தவர்கள், இன்னும் வழக்கு விசாரணை என்று அலைந்து கொண்டுள்ளனர்.

பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் போட்டனர். ஆனால், அந்த திட்டங்கள் பேப்பரில்தான் உள்ளன. தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள்தான் அவர்களை திருத்த வேண்டும் என்றார்.

பின்னர் ஆற்காடு பஸ் நிலையம் அருகே அவர் பேசுகையில், நான் உங்கள் மூலமாக தெய்வத்தைப் பார்க்கிறேன். அதனால்தான் யாருடன் கூட்டணி என்றால் மக்களுடனும் தெய்வத்துடன் கூட்டணி என்கிறேன்.

சமச்சீர் கல்வி சொல்லி கொடுத்தால் போதாது. மக்கள் படிக்க சம வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். ஒருமுறை மாற்றி வாக்களிக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஊழலையும், வறுமையையும் ஒழிப்பேன் என்று 2006 தேர்தலின் போது சொன்னேன், இதனால் என்னை கிண்டல் செய்தார்கள். யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் நாங்கள் எப்படி ஆட்சி செய்கிறோம் என்று பாருங்கள் நான் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.

இதுவரை உள்ளாட்சி தேர்தலில் யாராவது உங்களை பார்க்க வந்திருக்கிறார்களா? நான் வந்திருக்கிறேன். எனது கட்சி வேட்பாளர்கள் நன்றி மறக்க மாட்டார்கள் ஒரு தடவை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

எங்கள் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள், கம்யூனிஸ்டு கட்சியினரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். நான், காசு, பேர், புகழ் ஆகியவற்றை பார்த்து விட்டேன், நான் நானாக தான் இருப்பேன். விஜயகாந்த் வாழ்ந்தான் என்று கூற வேண்டும்.

எனது வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினர் யாரையும் லஞ்சம் வாங்க விட மாட்டேன். ஊழலையும் வறுமையையும் ஒழிப்பேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும் என்றார்.