குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை
பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.







