அத்வானி கொலை முயற்சி வழக்கில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுச் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீனை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல காவல்துறை திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் பாஜக-வின் தலைவர்களில் ஒருவரான அத்வானி ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை வந்தார். அவர் அங்கிருந்து யாத்திரை செல்லும் வழியில் பைப் வெடிகுண்டு ஒன்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் கடந்த 1ம் தேதி அப்துல் ரகுமான் மற்றும் இஸ்மத் என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர். இநக்ச் சதி செயலுக்கு இமாம் அலி கூட்டாளியாக கருதப்படும் போலீஸ் பக்ருத்தீன் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், சென்னை மண்ணடியைச் சேர்ந்த எம்.அப்துல்லா என்பவர் சென்னசுயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு(ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
"நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (வயது 35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வழக்கு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன்.
இந்த நிலையில், கடந்த 2ம் தேதி சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அவர்களின் அலுவலகத்தில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொலை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளருமான ஜெ.அப்துல் ரஹீமும், தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்குத் தந்தி அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவுமில்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமில்லை.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. எனவே சட்ட விரோத காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியில்விட அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்." என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது