காபூல் : உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதி ஆஃப்கானில் வெளியிடப்பட்டது. 2.28 மீட்டர் நீளமும், 1.55 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் 500 கிலோ எடை கொண்டது. 218 தாள்கள் உள்ளன. 5 லட்சம் டாலர் செலவான இத்திருக்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரியது என ஆஃப்கானிஸ்தானின் ஹஜ் மற்றும் மார்க்க விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரபல கையெழுத்தாளர் முஹம்மது ஸாபிர் காதிரியும், ஒன்பது மாணவர்களும் இணைந்து இத்திருக்குர்ஆன் பிரதியை தயாரித்துள்ளனர். வசனங்களின் முக்கியத்துவத்தைக் குறித்து குறிப்பிட்ட நிறத்தில் சில பகுதிகள் உள்ளன.
2009 ஆம் ஆண்டு இதனை அலங்கரிக்கும் பணி பூர்த்தியானது என்றாலும் நேற்று முன்தினம்தான் காதிரி இதனை அறிவித்தார்.
30 ஆண்டுகளாக ஆஃப்கானில் நடக்கும் போர் ஆஃப்கானின் வளமான பூர்வீகத்தை தகர்த்துவிடவில்லை என்பதை தனது பணியின் மூலம் நிரூபித்துள்ளேன் என காதிரி கூறினார்.
1980-களில் நிறுவிய காபூல் கலாச்சார மையத்தில் இந்த திருக்குர்ஆன் பிரதி பாதுகாக்கப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் இங்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான பிரபல நூல்களும், சுகாதார மையம், பள்ளிக்கூடங்கள், கலைப்பொருட்கள் பாதுகாப்பு மையம் ஆகியன செயல்பட்டன. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பிலும் அதற்கிடையே நடந்த உள்நாட்டுப் போரிலும் இந்த கலாச்சார மையத்திற்கு பெரும் நஷ்டங்கள் விளைந்தன.
இதுவரை ரஷ்யாவின் ததர்ஸ்தானில் பகுதியில் உள்ள திருக்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆன் பிரதியாக கருதப்பட்டது. அந்த திருக்குர்ஆன் பிரதி இரண்டு மீட்டர் நீளமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்டது.