சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தார். அவர் தனது பதவியை கடந்த வாரம் திடீரென ராஜிநாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, தேர்வாணையத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. இந்நிலையில், ஆளுநர் கே.ரோஸய்யாவின் உத்தரவுப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சிக்கு பொதுவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தாம் தலைவர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் முதன்முதலாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.நடராஜ், தென் மாவட்டங்களை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியைப் பிடிப்பதிலும், காட்டுக் கொள்ளையன் வீரப்பனைத் தேடும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர். சென்னை மாநகர போலீஸ் ஆணையராக கடந்த 2003 முதல் 2006 வரை பணியாற்றினார். மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். தனது சிறப்பான போலீஸ் பணிக்காக 1993-ல் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் நடராஜுக்கு வழங்கப்பட்டது.