புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வாத-பிரதிவாதங்கள் உ.பி சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.
மாநிலத்தில் நிர்ணாயக வாக்கு வங்கியான முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு அரசியல்கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுடன் பிறக்கட்சிகள் மீது பழி சுமத்துவதிலும் மும்முரமாக உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் உள் ஒதுக்கீடு ஏமாற்றுவேலை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டுகிறார். தற்போதைய உள் ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சிறுபான்மையினர்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடியது என முலாயம் கூறுகிறார்.
சச்சார் கமிஷனையும்,ரங்கநாத் மிஷ்ரா கமிஷனையும் உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் முஸ்லிம்களை ஏமாற்றுகிறது என முலாயம் கூறுகிறார்.
டெல்லி ஷாஹி இமாம் செய்யத் அஹ்மத் புஹாரிக்கு அனுப்பிய கடிதத்தில் முலாயம் இக்குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். முஸ்லிம்களுக்கு கிடைக்கவேண்டிய இத்தகைய உரிமைகளை பெறுவதற்கு தனது கட்சி உறுதுணையாக இருக்கும் என டெல்லி இமாமுக்கு முலாயம் உறுதி அளித்துள்ளார். தான் அளித்தது போன்ற வாக்குறுதியை உ.பியில் வேறு எந்த கட்சியும் அளிக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ள முலாயம், இடஒதுக்கீட்டை அமுல்படுத்த சட்ட வல்லுநர்களுடனும், சமூக இயக்கங்களுடனும், அறிவு ஜீவிகளுடனும் கருத்தை ஆராய்வேன் என கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் இதர நான்கு மாநிலங்களை விட உ.பி-யில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாகும். ஏறத்தாழ 18 சதவீத முஸ்லிம் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பிவிட்டால் அதிகாரத்தை கைப்பற்றுவது எளிதாகும் என்பதால் வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றன அரசியல் கட்சிகள்.
ஃபரூக்காபாத் சட்டமன்றத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். முதலில் சல்மானின் அறிவிப்பு குறித்து மழுப்பலான பதிலை கூறிவந்த காங்கிரஸ் தலைமை, நாட்கள் செல்ல செல்ல குர்ஷிதின் கருத்தை ஆதரிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருவதாகவும், 4.5 உள் ஒதுக்கீட்டை நிறுத்திவைக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளதாகவும் காங். செய்தித் தொடர்பாளர் ராஷித் ஆல்வி கூறியுள்ளார்.