புதுடெல்லி : பாட்லா ஹவுஸ் முதல் முஸ்லிம்-ஜாட் இடஒதுக்கீடு வரை, ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள் முதல் தலித் பாரபட்சம் வரை, 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முதல் உள்ளூரில் நடக்கும் க்ரிமினல் குற்றங்கள் வரை என உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சர்ச்சைக்குரிய விஷயங்களாக மாறியுள்ளன. இவையில் ஏதேனும் ஒன்று உ.பி சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.
11,19,16,689 வாக்காளர்களை கொண்ட 403 தொகுதிகளை உடைய உ.பியின் ஆட்சியை பிடிப்பது என்பது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கனவாகும்.
உத்தரபிரதேசத்தில் வெற்றிபெறுவது மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான முதல் காலடி சுவடு என கூறப்படுவதுண்டு. ராகுல் காந்தியை காங்கிரஸ் களமிறக்கி இருப்பதும், பா.ஜ.க வகுப்புவாத அரசியலை மீண்டும் கையில் எடுத்திருப்பதும் சும்மா அல்ல.
பா.ஜ.கவின் கலப்படமில்லாத வகுப்புவாதமும், மாயாவதியின் தலித் பிராமண கூட்டணியும் ஒரே போல செல்லுபடியான மாநிலம்தான் உ.பி.
அரசியல் விழிப்புணர்வைவிட உணர்ச்சிகளுக்குத்தான் இங்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. இத்தேர்தல் பிரச்சாரமும் அதன் அடிப்படையில்தான் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச்-3 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முலாயம்சிங்கிற்கும், மாயாவதிக்கும் மட்டுமல்ல, காங்கிரஸிற்கும், பா.ஜ.கவிற்கும் வலுவான வேர்கள் உள்ள மாநிலம்தான் உ.பி.
ராகுல் காந்தி காங்கிரஸின் முழுநேர நாயகனாக மாறியுள்ள உ.பி தேர்தலில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவோம் என்பது காங்கிரஸின் பிரச்சார ஆயுதங்களில் ஒன்றாகும். பா.ஜ.கவோ ஜாதி-மதவாத பிரிவினைகள் மூலமாக ஆதாயம் தேட முயலுகிறது. உமாபாரதி போன்ற தீவிர வகுப்புவாதிகளையும் உ.பி தேர்தலில் போட்டியிட செய்யவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் யாதவர்கள் அல்லாத இதர ஒ.பி.சி பிரிவினர் தங்களை ஆதரிப்பார்கள் என கருதுகிறது பா.ஜ.க. மேலும் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களையே திருப்திப்படுத்த முயலுகிறது என்ற பிரச்சாரத்தின் மூலம் ராஜபுத்திர, பனியா, பிராமண வாக்குகளையும் பெற்றுவிடலாம் என்ற நப்பாசை பா.ஜ.கவுக்கு உள்ளது.
மாயாவதிக்கு மேல்ஜாதியினரின் வாக்குகளில் இழப்பு ஏற்படும் என பா.ஜ.க கருதுகிறது. 2007 ஆம் ஆண்டு முலாயம்சிங்கை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு காரணமானது உயர்ஜாதியினரின் வாக்குகளாகும் என்பது பா.ஜ.கவின் கணக்கீடாகும்.