லண்டன் : கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மரணிப்பதற்கு, இதுக்குறித்த முன்னறிவிப்பை சர்வதேச சமூகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம் என பிரிட்டன் நிவாரண அமைப்புக்கள் கூறியுள்ளன.
சோமாலியா,கென்யா,எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் கடந்த ஆண்டு மரணித்தனர்.
கடந்த மே-ஜூலை மாதங்களில் மட்டும் 29 ஆயிரம் ஐந்து வயதுக்கு கீழான குழந்தைகள் பட்டினியால் இந்த நாடுகளில் மரணித்தனர் என அமெரிக்கா அறிவித்தது. இத்தகைய துயர சம்பவம் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என ஆக்ஸ்ஃபார்ம் மற்றும் சேவ் த சில்ட்ரன் ஆகிய அமைப்புகள் கூறியுள்ளன.உலக நாடுகளும்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், ஐ.நாவும் சம்பவித்த இச்சம்பவங்களில் இருந்து பாடம் படிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘அபாயகரமான தாமதம்’ என்ற தலைப்பில் இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளன. பட்டினி மூலமாகத்தான் மக்கள் மரணிக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ள கென்யாவும், எத்தியோப்பியாவும் தயாராகவில்லை. இதுவும் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்தியது. இத்தகைய எச்சரிக்கைகள் பல தடவை கேட்டுள்ளோம் என்ற அலட்சியப்போக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் காணப்பட்டது.
உலக நாடுகள் உதவிகளை அளிக்கும் முன்பு மக்கள் பட்டினி மூலம் இறந்தார்கள் என்பதற்கு ஆதாரங்களை கேட்டதாகவும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
2010 ஆகஸ்ட் மாதம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் கடந்த 2011 ஜூலை மாதம் வரை உதவி வழங்க யாரும் தயாராகவில்லை என அவ்வறிக்கை கூறுகிறது.