சென்னை : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மண்டபம் கிராமத்தைச் சார்ந்த 5 இருளர் இன பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களை கைது செய்யாததற்கு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாரை கைது செய்யாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசராணைக்கு வந்தபோது தமிழகஅரசு விளக்கம் அளித்தது. அப்போது அரசு சார்பில் கூறியது:
இருளர் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு தான் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் பலாத்காரம் நடந்ததை விசாரணை அதிகாரிகளால் உறுதிபடுத்த முடியவில்லை. அவர்கள் உறுதிபடுத்தாததால்தான் போலீசாரை கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதயைடுத்து நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அரசின் பதில் திருப்தியளிக்கவில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.