கெய்ரோ : அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு காரணம் கூற எகிப்தின் ராணுவ அரசு பயங்கரவாத வழக்கை ஜோடித்ததாக மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.
சுற்றுலா மையங்கள் மற்று எரிவாயு பைப்லைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் எகிப்திய ராணுவம் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் மீது பழியை போட்டு அந்த இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது. மேலும் அவரை கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இல்லை என அரசு வழக்குரைஞர் கூறியபோதிலும் பத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என ஹியூமன் ரைட்ஸ் கூறுகிறது.
சிறையில் அடைக்கப்பட்டவர்களை மேற்கோள் காட்டி இத்தகவலை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ளது.
அதேவேளையில்,எகிப்து அதிபர் தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது. ராணுவ கவுன்சில் உறுப்பினர் ஜெனரல் முஹ்ஸின் ஃபங்கரி எகிப்து நாட்டு தொலைக்காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜூனில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு பிறகு அதிகாரத்தை சிவிலியன் அரசிடம் ஒப்படைப்போம் என ராணுவ கூறியுள்ளது. முபாரக் அரசு ஜனநாயக புரட்சியை தொடர்ந்து பதவி விலகியதை தொடர்ந்து நடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் பாராளுமன்ற தொகுதிகளில் 3-இல் 2 பகுதி இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.