முர்ஷிதாபாத் : மேற்கு வங்காள மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பத்து கிராமங்களை சர்வ ஷிக்ஷா கிராமங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தத்தெடுத்ததாக சேர்மன் இ.எம்.அப்துற்றஹ்மான் அறிவித்துள்ளார்.
10 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஸ்கூல் கிட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சியை அவர் துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் தவுலாதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பட்டதாரி மாணவர்களுக்கான இரண்டாவது கட்ட கல்வி உதவித் தொகையை (ஸ்காலர்ஷிப்) வழங்கும் நிகழ்ச்சியிலும் இ.எம்.அப்துற்றஹ்மான் கலந்துக் கொண்டார்.
டிசம்பர் 20-ஆம் தேதி முர்ஷிதாபாத்தில் துவங்கிய ‘ஸ்கூல் சலோ’ பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.ஆறு வயதிற்கும், 15 வயதிற்கும் இடைப்பட்ட அனைத்து சிறுவர்-சிறுமிகளும் பள்ளிக்கூடம் செல்வதை உறுதிச்செய்யும் வகையில் ‘ஸ்கூல் சலோ(பள்ளிச் செல்வோம்)’ பிரச்சாரத்தை தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இப்பிரச்சார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்வி, சுகாதாரம், பொருளாதார தன்னிறைவு ஆகியவற்றில் முன்மாதிரி கிராமங்களாக மாற்றுவதற்கு 10 கிராமங்களை சர்வசிக்ஷா கிராமங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் தத்தெடுத்தது.
கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் நிறுவுவதற்கும், சுயத்தொழில் திட்டங்களுக்கும் அப்பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பாப்புலர் ஃப்ர்ண்ட் பொருளாதார உதவியை அளிக்கும் என இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு உறுப்பினர் ஒ.எம்.அப்துஸ்ஸலாம், பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கு வங்காள மாநில தலைவர் முஹம்மது ஷஹாபுத்தீன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.