கெய்ரோ : புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு முக்கிய ஸலஃபி அரசியல் கட்சியான அந்நூர் இதர கட்சிகளை அணுகி வருகிறது.
ஆனால், ஸலஃபி அமைப்புகளுடன் மேற்கத்திய சார்பு கொள்கையை கொண்ட கட்சிகளால் கூட்டணியை ஏற்படுத்துவது சிரமம் என கருதப்படுகிறது.
இதுத்தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக அல் அரபியா நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. ஃப்ரீ ஈஜிப்ஸியன்ஸ், கிறிஸ்தியன் வஃப்த் பார்டி ஆகிய கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
மார்க்க காரியங்களில் கடுமையான நிலைப்பாட்டை கையாளும் ஸலஃபி கட்சியான அந்நூரின் தலைவர்கள் வஃப்த் பார்டியின் தலை மறைக்காத பெண் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதில் தயக்கம் காட்டவில்லை என இப்பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த அல் வஸத் கட்சியின் மூத்த தலைவர் எஸ்ஸாம் சுல்தான் கூறுகிறார்.
ஸலஃபி கட்சியான அந்நூர் பேச்சுவார்த்தை நடத்திய ஃப்ரீ ஈஜிப்ஸியன்ஸ் கட்சி யார் உருவாக்கியது தெரியுமா?இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கார்ட்டூனை ட்விட்டரில் போஸ்ட் செய்ததால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் கோடீஸ்வரன் நகிப் சுவைரிஸ் என்பவர் ஆவார்.
அல்நூரின் தலைவர் இமாத் அப்துல் கஃபூர் இப்பேச்சுவார்த்தை நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிவிட்டார். விசாலமான தேசிய நல்லிணக்கம் தான் தங்களுடைய லட்சியம் எனவும், ஏதேனும் ஒரு கட்சிக்கு அதிக அதிகாரம் கிடைப்பது அனுமதிக்க முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.
மூன்று கட்டங்களாக நடந்த எகிப்து பாராளுமன்ற தேர்தலில் 50 சதவீத இடங்களை இஃவான்கள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. ஸலஃபிகளுக்கு 20 சதவீத இடங்களும், மதசார்பற்ற கட்சிகள் உள்ளிட்ட இதர கட்சியினருக்கு மீதமுள்ள இடங்கள் கிடைத்துள்ளன.
பாராளுமன்றத்தில் அனைத்து பதவிகளும், அரசியல் சட்டம் இயற்றுவதற்கான 100 உறுப்பினர்களை கொண்ட அவையில் பெரும்பான்மையும் இஃவான்களுக்கு கிடைத்துவிடுமோ என ஸலஃபிகள் அஞ்சுகிறார்கள்.