சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் 11.01.2012 அன்று மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாகவும், தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகலை போற்றும் விதமாகவும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும்,
போராடிபெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைத்து மக்களு உறுதி மொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்க செய்யும் விதமாகவும் தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகின்றோம்.
2008ம் ஆண்டு மதுரையிலும், 2009ம் ஆண்டு கும்பகோணத்திலும், 2010ம் வருடம் மேட்டுப்பாளையத்திலும் இதனை நடத்தியுள்ளோம்.
கடந்த 2011 ஆகஸ்ட் 15 அன்று நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதபோக்குடன் செயல்பட்ட அப்போதைய நெல்லை மாநகர காவல்துறை நீதிமன்றத்தை அணுகுவதற்கு கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடாது அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.
இதனை கண்டித்து ஆகஸ்ட் 17 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து காவல்துறை ஆணையரின் ஆணையை ரத்து செய்யக்கோரியும், சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடத்த, ஏற்கனவே திட்டமிட்ட அந்த அணிவகுப்பை வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அதே இடத்தில் நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தோம்.
நீதிமன்றத்தில் அந்த மனுவின் மீதான் விசாரணையில் குடியரசு தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என நெல்லை காவல்துறை சார்பாக வாதிட்டார் அரசு தரப்பு வழக்கறிஞர். அது மட்டுமின்றி ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பாப்புலர் ஃப்ரண்டின் மீது சுமத்தியது காவல்துறை. இந்த குற்றச்சாட்டுகலை மறுத்து பாப்புலர் ஃப்ரண்ட் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவிற்கு காவல்துறை நீதிமன்றத்தில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே நெல்லை மாநகரில் பாளையங்கோட்டையின் பொது வீதிகளில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு கடந்த வருடம் ஜனவரி 29 அன்று அனுமதி வழங்கிய நெல்லை மாநகர காவல்துறை, பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு மட்டும் அனுமதி மறுத்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவ உரிமைக்கும் (பிரிவு 14) எதிரானது மற்றும் பாரபட்சமானது என பாப்புலர் ஃப்ரண்டின் வழக்கறிஞர் திரு. தி. லஜபதிராய் அவர்கள் கடந்த வாரம் 04.01.2012 அன்று உயரி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வாதாடினார்.
இந்நிலையில் 10.01.2012 இந்த வழக்கு இறுதிகட்டத்தை அடைந்தது. அன்றைய தினமும், அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து வேண்டுமென்றே கால நீட்டிப்பு கோரியது அரசு தரப்பு. சுதந்திரத்தை கொண்டாடுவதற்கோ, பொது நிகழ்ச்சிகள், நடத்துவதற்கோ அனுமதி கோரினால் சிறுபான்மையினருக்கு மட்டும் திட்டமிட்டு மேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் செயல்பட்டு அனுமதி மறுக்கின்றது காவல்துறை என பாப்புலர் ஃப்ரண்டின் வழக்கறிஞர் திரு எஸ்.எம்.ஏ ஜின்னா அவர்கள் வாதாடினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தினங்களை தவிர மற்ற நாட்களில் மைதானத்திற்குள் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க தயாராக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் இதை தவிர்த்து வேறு நாட்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுவது அதற்குரிய பலனை நிறைவு செய்யாது என்றும், மேலும் மக்களுடைய சுதந்திர உணர்வுகளை வெளிப்படுத்த அது பொருத்தமாக அமையாது என்பதனாலும், மற்ற தினங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் அணிவகுப்பை நடத்த முடியாது. எனவே ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சுதந்திர உணர்வுகளை வெளிப்படுத்தும் அணிவகுப்பு நடத்த முஸ்லிம்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லையென்றால், வேறு நாட்களில் நடத்துவதற்கான உத்தரவு தேவையில்லை. ஆகவே நாங்கள் இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்கின்றோம் என பாப்புலர் ஃப்ரண்டின் வழக்கறிஞர் எஸ்.எம்.ஏ ஜின்னா அவர்கள் வாயிலாகத் தெரிவித்து, ரிட் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டோம்.
போராட்டம் தொடரும்:
மனுவைத்தான் வாபஸ் வாங்கியிருக்கின்றோமே தவிர, முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தை வாபஸ் வாங்கவில்லை.
இந்தியாவில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் இந்த மாபெரும் அநீதியை எதிர்த்து சட்டரீதியான போராட்டங்கள் தொடரும்; அதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு போதும் பின்வாங்காது என்பதை மக்கள் மன்றத்தில் நாங்கள் பதிவு செய்ய விரும்புகின்றோம்." இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.