1. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டில் 4.5% உள் ஒதுக்கீட்டை தற்போது மத்திய அரசு சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ளது. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன் வந்திருப்பதை இச்செயற்குழு வரவேற்கின்றது. ஆனால் இந்த சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்றும், தற்போது முஸ்லிம் சமூகம் பெற்று வரும் மிக மிக சொற்பமான பலனைக்கூட இது பாதிக்கும் என்பதனையும் இச்செயற்குழு சுட்டிக்காட்டுகின்றது.
அதே நேரத்தில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைத்தபடி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீட்டை வழங்குவதே முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், அதனை காலம் தாழ்த்தாது அமுல்படுத்த மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
2. கடந்த பல வருடங்களாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் 22 தமிழகத்தில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 3 இடங்களில் நடைபெறுவதாக இருந்த இந்த போராட்டத்தை, 5 இடங்களாக அதிகரித்து சென்னை, கோவை, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் நடத்த இச்செயற்குழு தீர்மானித்துள்ளது. "மத்தியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு! மாநிலத்தில் உரிய இடஒதுக்கீடு!!" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி நடைபெறும் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு அலைகடலென திரண்டுவருமாறு சமுதாய சொந்தங்கள் அனைவரையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
3. இடஒதுக்கீட்டில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை ஒருங்கினைத்து வருகின்ற ஜனவரி 26 அன்று சென்னையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
4. தமிழகத்தில் "தானே" புயலால பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் அந்த மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் காலம் தாழ்த்தாமல் செய்திட வேண்டும் என்றும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
5. "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தை வருகின்ற பிப்ரவரி 10 முதல் 20ஆம் தேதி வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நடத்துகின்றது. தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் துவக்க விழா பிப்ரவரி 10 அன்று கோவையில் நடைபெறுகின்றது. இதனை தொடர்ந்து யோகா, நடைபயிற்சி, மெல்லோட்டம், உடற்பயிற்சி ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடைபெறும். பிப்ரவரி 19ம் நாளை "ஆரோக்கியம் மற்றும் சுகாதார தினமாக" அனுசரித்து (HEALTH AND HYGENIC DAY), அந்நாளில் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ள இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
6. 1948ஆம் ஆண்டு சங்கப்பரிவார கும்பலைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சேயால் தேசத்தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் தான் ஜனவரி 30. அன்றைய தினத்தில், ஃபாசிஸத்தின் கோரமுகத்தை வரலாறு மறந்திடக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் காந்தி நினைவு தின போஸ்டர் பிரச்சாரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க நடந்த இந்த சங்கப்பரிவார சதியை மக்களுக்கு நினைவூட்டும் விதமாகவும் இப்பிரச்சாரத்தை மேற்கொள்ள இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
என மாநிலச்செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி செய்தி வெளியிட்டுள்ளார்.