அஹ்மதாபாத்:மோடியின் ‘ஸத்பாவனா’ உண்ணாவிரதத் தொடரின் ஒரு பகுதியாக கோத்ராவில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதம் கேலிக் கூத்தானது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி மோடி கோத்ராவில் உண்ணாவிரதமிருக்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே ஸ்டேசனில் சபர்மதி எக்ஸ்பிரஸின் ரெயில் பெட்டி தீவைத்து கொளுத்தப்பட்டு 59 கரசேவகர்கள் தீயில் கருகி இறந்தனர். விசாரணை கூட நடத்தாமல் இச்சம்பவத்திற்கு காரணம் முஸ்லிம்கள் தாம் என மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 94 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 63 பேர் 2001 மார்ச் மாதம் விடுதலைச் செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சிறையில் உள்ளனர்.மோடியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அணுவளவு கூட உள்ளார்ந்த நேர்மை இல்லை என பி.யு.சி.எல் மனித உரிமை அமைப்பின் மாநில தலைவர் ஜுஸார்.எஸ்.பந்தூக் வாலா குற்றம் சாட்டுகிறார். வகுப்பு வெறியை தணிக்க விரும்பியிருந்தால் ரெயில் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்த உடனேயே அதனை செய்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு எதிராக உணர்ச்சியை தூண்டும் வகையில் உரைகளை நிகழ்த்தியவர் மோடி என பந்தூக் வலா கூறுகிறார்.
மோடியின் உண்ணாவிரதம் கேலிக் கூத்தானது என இன்னொரு மனித உரிமை ஆர்வலரான ஸயீத் உமர்ஜி கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை வளர்த்த முயன்ற மோடி மதநல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதமிருப்பது எதிர்மறையானது. கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டவர்தாம் ஸயீதின் தந்தை. பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டார்.
கோத்ரா முனிஸிபாலிட்டியில் பா.ஜ.கவுக்கு 18 முஸ்லிம் கவுன்சிலர்கள் உள்ளனர். பா.ஜ.க வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பதற்கான தந்திரம் தான் இந்த உண்ணாவிரதம் என சமூக ஆர்வலர் ஜாபிர் ஷேக் கூறுகிறார்.