லண்டன் : இந்தியாவையும், இந்தியர்களை அவமதிக்கும் பி.பி.சி செய்தி அலைவரிசையின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் இந்திய ஹைக்கமிஷன் சேனல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.
ஜெரமி க்ளார்க்ஸனின் ‘டாப் கியர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஹைக்கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி அலைவரிசை நிபந்தனையின்றி மன்னிப்புக்கோர வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் இந்திய ஹைக்கமிஷனின் உயர் அதிகாரி பி.பி.சியிடம் நேரடியாக அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே மெக்சிக்கோ,சீனா மக்களுக்கு எதிராக இனத்துவேச கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்தாம் ஜெரமி க்ளார்க்ஸன். இந்தியர்களின் டாய்லெட் முறையை கிண்டலடித்து காரில் டாய்லெட் நிறுவிய காட்சிகள் அடங்கிய நிகழ்ச்சியை ஒலிபரப்பியது விவாதத்தை கிளப்பியது. இந்நிகழ்ச்சி மூலம் க்ளார்க்ஸன், ‘காலின் அடியில் காரியத்தை சாதிப்பவர்கள்’ இந்தியர்கள் என்ற செய்தியை அளித்துள்ளார்.
முன்பு பிரிட்டனில் பொதுத்துறை ஊழியர்களை அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொல்லவேண்டும் என கருத்து தெரிவித்த ஜெரமி க்ளார்க்ஸன் எதிர்ப்பு மூலம் மன்னிப்புக் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.