புதுடெல்லி:இந்தியாவில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறப்பது தேசத்திற்கே அவமானம் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றிற்கு எதிரான குடிமக்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கையை டெல்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் அவர்.
அப்பொழுது அவர் தனது உரையில் கூறியதாவது: நம் நாட்டில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் பிறப்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.கடந்த காலங்களில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் துரிதவளர்ச்சி கண்டுவரும் நிலையில் இதுபோன்று அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறப்பது ஏற்புடையதல்ல.
இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (ஐசிடிஎஸ்)செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு கண்டிடலாம் என்று நம்பமுடியாது. ஆனால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண இத்திட்டத்தை ஒரு முக்கிய கருவியாக நாம் பயன்படுத்தலாம். கடந்த 7 ஆண்டுகளில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது வேதனைக்குரியது. அதேசமயம், சிறப்பு கவனம் செலுத்தப்பட்ட 100 மாவட்டங்களில் பிறக்கும் 5 குழந்தைகளுக்கு ஒரு குழந்தையின் எடை ஏற்புடையதாக உள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம்.
ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்னைக்கு பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளன. அவற்றில் தாய்மார்களின் கல்வி நிலை, குடும்பத்தின் பொருளாதார சூழல், குடும்பத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகியவற்றை முக்கியமானதாகக் கூறலாம். எனவே, நாட்டின் கொள்கையை வகுப்பவர்களும், அதை செயல்படுத்துபவர்களும் இந்தப் பிரச்னையை ஒருகோணத்தில் பார்க்காமல் பல்வேறு கோணத்தில் பார்க்கவேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற காரணிகளுக்கும் தொடர்பிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு கொள்கைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காணுவதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு.
மக்களுக்கு சுகாதார வசதிசெய்து கொடுப்பவர்கள் அதன் முக்கியத்துவம் குறித்து தெரிந்திருக்கவேண்டும். குடிநீர் வழங்கும் பொறுப்பில் உள்ளவர்கள் தரமான குடிநீரை வழங்கவேண்டும்.
தங்களிடம் படிக்கும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு இருப்பது அவசியம்.
சத்தான உணவு குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பது குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டாலே ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச்னைக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இப்பிரச்னைக்குத் தீர்வுகாண அதிக அக்கறை செலுத்திவருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் சிலமாற்றத்தை செய்து அதை சிறப்பாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்னை அதிகமாக உள்ள 200 மாவட்டங்களை கண்டறிந்து அங்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர் மன்மோகன்சிங்.