மீனம்பாக்கம் : பைலட் வராததால் சென்னையிலிருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானம் தாமதமானது. இதனால் அதிகாரிகளை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 146 பயணிகளுடன் செல்ல இருந்தது. இரவு 9 மணிக்கெல்லாம் பயணிகள் வந்துவிட்டனர்.
பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் ஏற பயணிகள் தயாராக இருந்தனர். ஆனால் விமானத்தை இயக்க வேண்டிய பைலட் வரவில்லை. இதனால் பயணிகளை விமானத்தில் ஏற்றாமல் காலதாமதம் செய்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘விமானி வரவில்லை, மாற்று விமானியை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்Õ என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனால் அதிகாலை 2.30 மணிவரை மாற்று விமானியும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். ‘காலை 10 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும், அதுவரை உங்களை ஒரு ஓட்டலில் தங்க வைக்கிறோம்Õ என்று கூறி சொகுசு பஸ்களில் ஏற்றி சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைத்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு 146 பயணிகளும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 10 மணி நேரம் தாமதமாக கோலாலம்பூருக்கு விமானம் புறப்பட்டது.
பைலட் இல்லாமல் பயணிகள் தவித்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.