நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 24 செப்டம்பர், 2011

பூமியை நோக்கி விழும் செயற்கைக்கோளின் வேகம் குறைந்தது.. இன்று விழும்!

வாஷிங்டன் :  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் துண்டு, துண்டாக நேற்றி பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் வீழ்ச்சி வேகம் குறைந்துவிட்டதால் இன்று விழவுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.

அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும். இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோளின் பாகங்கள் நேற்று பிற்பகல் முதல் இன்று வரை வந்து விழும் வாய்ப்புள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில் செயற்கைக்கோளின் பகுதிகள் வந்து விழலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய நிலவரப்படி செயற்கைக்கோளின் 26 பாகங்கள் அதிகளவில் அண்டார்டிக்கா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் விழும் என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கடலில் தான் விழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஏற்கனவே தெரிவித்தபடி செயற்கைகோளில் இருந்த எரி பொருள் தீர்ந்துவிட்டதால் அதை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதும் இயலாத காரியம்.

இதுவரை செயற்கைக்கோள் தாக்கி யாரும் இறந்ததாக தகவல் இல்லை. ஆனால் கடந்த 1997ல் ஒக்லாவைச் சேர்ந்த வில்லியமஸ் என்பவர் மட்டும் காயமடைந்துள்ளாக தெரிகிறது. செயற்கைக்கோள் ஒன்றின் சிறிய துண்டு அவரது தோளில் விழுந்ததால் காயமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோளின் துண்டுகள், 3,200 பேரில் 1 நபர் மீது விழ வாய்ப்புள்ளது. அப்படி விழும் துண்டுகள் மின்னலை விட வேகமாக மேலே வந்து விழும் என தெரிகிறது. பூமியில் வந்து விழும் செயற்கைக்கோளின் துண்டுகளையும் யாரும் தொட வேண்டாம்.

செயற்கைக்கோள்களின் துண்டுகள், ராக்கெட்கள், மற்ற பொருட்கள் என இதுவரை 22,000க்கும் மேலான வஸ்துக்களை பூமி தன்னிடம் ஈர்த்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் விழும் மிகப்பெரிய செயற்கைக்கோள் இதுதான். தற்போது விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பினால் அவற்றை கட்டுப்படுத்த எரிப்பொருள் மீதம் வைக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பூமிக்குத் திரும்பும் செயற்கைக்கோள்களின் அசைவுகளை பொழுதுபோக்காக பார்த்து ரசிக்கும் பழக்கம் கொண்ட கனடா நாட்டை சேர்ந்த டிடு மொல்சன் என்பவர் கூறுகையில், கடந்த 2004ல் பூமிக்கு திரும்பிய ரஷ்ய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பெரியளவில் பார்த்திருக்கிறேன். அது மிகப் பெரிய வால்நட்சத்திரம் போல இருந்தது என்றார்.