உத்திரபிரதேசம், பீகார், உத்தராஞ்சல், ஜார்க்கண்ட் உள்பட வடமாநிலங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர், வெல்டர், கட்டிட பணிகளுக்கு ஏஜென்டுகள் மூலம் தலா ரூ.50 ஆயிரம் பெற்று ஆட்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் வேலைக்கான விசா இல்லாமல் சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.மேலும் அங்கு அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் விசா காலம் முடிந்து அதிக நாள் தங்கியிருந்ததாக கூறி இந்தியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் தண்டனை காலம் முடிந்த பின் இந்தியர்களை சவுதி அரேபிய அரசு விமானத்தில் அனுப்பி வைக்கிறது.
கடந்தசில தினங்களுக்கு முன்பு 70 பேரை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அதுபோல் இன்று சவுதி அரேபியாவில் இருந்து 117 பேர் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை கிஷோர் என்பவர் கூறுகையில்,
வெளிநாட்டில் வேலை என்ற ஆசையில் சென்றோம். ஆனால் கடன் வாங்கி சென்ற எங்களுக்கு துன்பம் ஏற்பட்டது. சவுதி அரேபிய அரசு சுற்றுலா விசாவில் சென்றதாக கூறி எங்களை சிறையில் அடைத்தனர்.
மலேசியா, வங்காளதேசம் போன்ற நாடுகளின் தூதரக அதிகாரிகள் வந்து நாட்டினரை அழைத்து சென்றனர். ஆனால் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை. தற்போது சவுதி அரசே அனுப்பி உள்ளது என்றனர்