மும்பை : தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையின் போது, அவனுக்காக வாதாட பிரபல மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கி 3 நாட்களாக பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்தியதில் போலீஸ் அதிகாரிகள், வெளிநாட்டவர் ஆகியோர் உட்பட 164 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளை எதிர்த்து கடற்படையை சேர்ந்த அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த தனி நீதிமன்றம் கசாப்புக்கு மரண தண்டனை வழங்கியது. ஆனால் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பாகிம் அன்சாரி மற்றும் சகாபுதீன் ஷேக் அகமது ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2010ம் ஆண்டு மேமாதம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை மும்பை ஐகோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்தது. ஆனால் பாகிம் அன்சாரி மற்றும் சகாபுதீன் ஷேக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து கசாப் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளான். அதே நேரத்தில், பாகிம் அன்சாரி மற்றும் சகாபுதீன் ஷேக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசும் சுப்ரீம் கேர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுக்கள் மீது விரைவில விசாரணை நடைபெறவுள்ளது.இதனிடையே, சுப்ரீம் கோர்ட்டில் கசாப்புக்காக வாதாடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வழக்கில் குறறம்சாட்டப்பட்டவர் தனக்காக வக்கீலை நியமிக்கலாம். அவ்வாறு அவர் நியமிக்காத பட்சத்தில், அருக்காக வாதாட நீதிமன்றமே ஒரு வக்கீலை நியமிக்கலாம். இதன்படி சப்ரீம் கோர்ட்டில் கசாப்புக்காக வாதாட ராமசந்திரனை நீதிமன்றம் நியமித்துள்ளது.தனி நீதிமன்றத்தில் கசாப்புக்காக வாதாட அப்பாஸ் காஸ்மி என்ற வக்கீலும், மும்பை ஐகோர்ட்டில் அவனுக்காக வாதாட வக்கீல்கள் அமீன் சோல்கரும், பர்ஹானா ஷாவும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.