வணக்கம்!
நான் மறைந்த பின்பு, இந்திய முஸ்லிம் சமூக மக்களிடம் பேச வேண்டும் என்று பல முறை விரும்பியிருக்கிறேன். முஸ்லிம்களுக்கு சார்பானவன் நான், என்னால்தான் தேசம் பிளவுபட்டது போன்ற
குற்றச்சாட்டுக்களால் இதை நான் தவிர்த்து வந்தேன். இந்த காரணங்களால் ராம் பக்தன் ஒருவனால் நான் கொல்லப்பட்டேன் என்பதையும் நினைத்துப் பார்த்து என்னுடைய இந்த ஆவலை நான் அடக்கி வைத்திருந்தேன்.
முஸ்லிம் சமூகத்துடன் பேச வேண்டும் என்ற என் ஆசையை, நான் இப்படியாக தீர்த்துக்கொண்டேன்:
அதாவது, நான் கொல்லப்படாமல் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? தேசத்திற்க்கு என் சேவை தேவைபட்டிருக்குமா? இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தடுத்து நிறுத்தியிருப்பேனா?
இவற்றிற்கெல்லாம் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நான் கொல்லப்படாமல் அதாவது ராம பக்தன் திருவாளர் கோட்சே என்னை சுட்டு வீழ்த்தி, நான் மரணமடையாமல் உயிர் பிழைத்திருந்தால், பின்னாளில் ஏதாவது சந்தர்பத்தில் அவனால்தான் நான் கொல்லப்பட்டிருப்பேன். இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவ்வளவு வெறி பிடித்து அலைந்து கொண்டிருந்தது அந்த காவிக்கூட்டம். பத்து முறை என்னை கொலை செய்ய முயற்ச்சித்தவர்கள் அல்லவா அவர்கள்! 11வது முறை நான் சுடப்பட்டு செத்திருக்காவிட்டால் 12வது தடவையோ அல்லது 20வது தடவையோ கூட முயற்ச்சி செய்து என்னை கொன்றிருப்பார்கள்.
இந்த உண்மையை, நான் புரிந்து வைத்திருக்கிற அளவுக்கு இந்த தேச மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் என்னால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஆமாம்... என்னை கொல்வதற்க்கு சதித்திட்டம் தீட்டிய மிஸ்டர் சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில் என் படத்திற்க்கு எதிரே வைத்து இறந்த பின்பும் என்னை இம்சித்து கொண்டிருக்கிறார்கள் இந்தக் காவிக்கயவர்கள்.
இதை எத்தனை இந்தியர்கள் எதிர்த்தார்கள்?
இதையெல்லாம் உணராத மக்கள் என்னுடைய பிறந்த நாளை வன்முறை எதிர்ப்பு தினமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் உங்களை சந்திப்பதை நான் பல முறை தவிர்த்து வந்திருக்கிறேன்.
கலவரங்கள், ரதயாத்திரை, பாபர் மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை... இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில்... சில மாதங்களுக்கு முன்பு பாபரி மஸ்ஜித் குறித்த நீதி மன்ற தீர்ப்பு வந்த போது கூட உங்களைச் சந்திக்க விரும்பியும் பின் வேண்டுமென்றே தவிர்த்து வந்தேன்.
ஏனெனில், என்னை கொன்று விட்டு பழியை உங்கள் மீது சுமத்த முயன்ற கூட்டம் இன்றும் நரமாமிசம் சாப்பிட அலைந்து கொண்டிருக்கும்போது என்னுடைய கடிதம் கூட இன்னொரு முறை உங்களின் மீதான் தாக்குதலுக்கு காரணமாகிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான்!
தற்போது உங்களோடு உரையாடுவதற்க்கான நல்லதொரு சந்தர்ப்பம் வாய்ந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். குடியரசு தினத்தன்று கஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றப் போவதாக இந்துத்துவவாதிகள் அறிவித்தவுடனேயே இந்த முடிவை நான் எடுத்தேன்.
ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம் என்று முழங்குகின்ற பாஸிஸ்டுகள் பன்முக கலாச்சாரத்தை பரைசாட்டுகின்ற குடியரசு குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?
சுதந்திர போராட்ட வீரர்களை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்த தேச துரோகிகள் தேசியக் கொடியை தொட தகுதியிருக்கிறதா?
இதையெல்லாம் விட முக்கியம் "கஷ்மீரில்" தேசியக்கொடி ஏற்றப் போகிறார்களாம்?!
ஃபாஸிஸ்டுகளின் அறிவிப்பு வெளியானவுடன் பரப்பரப்பு என்னை தொற்றிக்கொண்டது. நல்ல வேளையாக வகுப்புவாதிகளின் முயற்சியை கஷ்மீரிகள் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறார்கள். ஏன் எனக்கு இந்த விவகாரம் ஈர்ப்புடையதாக ஆனது? பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக என்னுடைய பழிவாங்கும் உணர்ச்சி! அகிம்சையை போதித்த இவனிடம் பழிவாங்கும் உணர்ச்சியா என்று நீங்கள் கேட்கலாம். வன்முறை கொண்டல்லாமல் பழிவாங்கும் முயற்ச்சி இது.
உங்களுக்கு தெரியுமா? என்னைக் கொலை செய்தவுடன் நாடே சோகத்தில் மூழ்கியிருந்தபோது, இந்துத்துவ ஃபாஸிஸ்டுகள் மட்டும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இதை நீங்களும் நானும் எதிர்ப்பார்த்ததுதான்! ஆனால் முஸ்லிம்கள் ஏகபோக உரிமையுடன் வாழ்வதாகவும், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மிகவும் துன்பப்படுவதாகவும் சித்தரிக்கப்படும் கஷ்மீரில் என்னுடைய படுகொலையை கொண்டாடினார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அங்கு அப்போதே ஃபாஸிசம் நன்றாக காலூன்றிவிட்டது. இதனால் ஏற்ப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சியை, ஃபாஸிஸ்டுகளை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்ததன் மூலம் கஷ்மீரிகள் என் என் ஆவலை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.
அடுத்ததாக, பிரிவினைக்கு என்னைப் பலிகாடாவாக்கி, துப்பாக்கி குண்டுகளுக்கு என்னை பலியாக்கினார்கள். ஆனால் பிரிவினைக்கு அவர்களை தள்ளினார்கள், நிர்பந்தித்தார்கள் என்பது தான் உண்மை.
அதே போன்றதொரு நிர்பந்தத்தைத்தான் தற்போது கஷ்மீரிகளுக்கு இந்துத்துவ ஃபாஸிசம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு வழிகளில் வகுப்புவாதத்தை தூண்டிவிடும் வேலையை அது தொடர்ந்து செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் தேசியக்கொடி ஏற்றுவதெல்லாம்....மேலும் இதன் மூலம் தன் இமேஜை உயர்த்தலாம் என்றும் காவிக் கூட்டம் துடிதுடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறது.
இந்த அத்துனை முயற்ச்சிகளையும் கஷ்மீரிகள் துடைத்தெறிந்துள்ளார்கள். இதன் மூலம் அவர்களின் தேசப்பற்று இந்தியா மீதான விசுவாசம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு உண்மையும் பொதிந்துள்ளது. அதாவது இங்குள்ள முஸ்லிம்கள் எப்போதும் இந்தியச்சார்புடனேயே இருந்து வருகிறார்கள் என்பதுதான் அது! அதாவது பிரிவினை என்பது முஸ்லிம்களால் ஏற்ப்பட்டதல்ல. இந்துத்துவ வாதிகளின் இரு தேசக்கொள்கையால் தான் ஏற்ப்பட்டது. இதுவும் இந்த விவகாரத்தில் நான் ஈர்ப்பு கொள்ள காரணமாக அமைந்தது.
மூன்றாவதாக கஷ்மீரில் வன்முறையை தூண்டும் இந்துத்துவவாதிகளின் சதிக்கு கஷ்மீரிகள் பலியாகாமல் அமைதி காத்ததுதான் என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் இந்த செயல் அகிம்சைவாதியான என்னை நெகிழச்செய்துவிட்டது. இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இந்த தேசியக்கொடி ஏற்றும் கேலிக்கூத்திற்கு செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, தேசம் சரியான திசையில் செல்லவும், தேச விரோதிகள் இல்லாமலாக்கப்படவும் சுதந்திரப் போராட்டக்களத்தில் என்னோடு தோள் கொடுத்து போராடியது போல் இப்பொழுதும் முஸ்லிம்கள் முன்னணியில் நின்று போராட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடனான இந்த உரையாடலைக் கேட்கும் காவிக் கும்பல் சூலாயுதத்துடன் என் கல்லறையை நோக்கி வரலாம்... பின்னொரு நாளில் என் எழுத்துக்கள் மூலமாக உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
30, ஜனவரி 2011
இடம்: ராஜ்கோட், டெல்லி
நன்றி : விடியல் வெள்ளி