சிக்கிம் மற்றும் நேபாளம் எல்லையை மையமாக கொண்டு கடந்த 18-ந்தேதி மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. சிக்கிம் தவிர பீகார், மேற்கு வங்காளம், அசாம், டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பூகம்பம் உணரப்பட்டது.
பூகம்பத்தால் சிக்கிமின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள மாங்கான, பீகார் பகுதிகளில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்தன. தொலை தொடர்புத்துறை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. குடிநீர், மின்சார வசதி தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.தலைநகர் காங்டாங்கிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வடமாநிலங்களில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது. சிக்கிமில் மட்டும் 60 பேர் பலியானார்கள். மேலும் அங்கு சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.
இன்று கிழக்கு பகுதியில் இருந்து 6 உடல்களும், வடக்கு பகுதியில் இருந்து ஒரு உடலும் மீட்கப்பட்டன. நேற்று இரவு பாங்கான், லாசுங், லாசென் பகுதியில் கடுமையான நிலச்சரிவும், பலத்த மழையும் இருந்தது. இதனால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது. நில நடுக்கத்தால் சிக்கமில் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 15 ஆயிரம் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளனர். குடிநீர், மின்சார வசதியை வழங்க முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
சிக்கமின் லாசங் கிராமம் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு இடிபாடுகளில் சுற்றுலா பயணிகள் 35 பேர் சிக்கி தவித்தனர். அவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். இதில் 2 பேர் நார்வே நாட்டை சேர்ந்தவர்கள். இதேபோல காயம் அடைந்த 16 பேரும் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
சிக்கிமில் நூற்றுக்கணக்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் நில நடுக்கம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும் இன்னும் பல இடங்களுக்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை. முக்கிய சாலைகளில் பெரிய பாறைகற்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் அந்த பாறைகளை ராணுவ வீரர்கள் வெடி வைத்து தகர்த்து விட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரக் கணக்கான கட்டிட இடிபாடு கள் அகற்றப்படாமல் உள்ளன.
இந்த பணி முடிய இன்னும் ஒரு மாதமாகும் என்று கூறப்படுகிறது. மிகவும் குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு ஹெலி காப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டு வருகிறது. தேசிய பேரழிவு மீட்புப் படையின ரும், ராணுவ வீரர்களும் சிக்கிமில் முகாமிட்டுள்ளனர்