லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர்.
கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்களில் 2 பேர் முஸ்லிம் பெண்கள் ஆவர். இம்முறை(2012) 69 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் முஸ்லிம் பெண்களாவர்.
இந்த தேர்தலில் அதிக வாக்குகள் (63,269)வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்ட முஹம்மது ஆஸம்கான் 95,772 வாக்குகளைப் பெற்று ராம்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டாக்டர்.தன்வீர் அஹ்மத்கான்(காங்கிரஸ்) 32,503 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
முஸ்லிம் வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமானது!
முஸ்லிம் வாக்காளர்கள் மன மாற்றம் சமாஜ்வாதி கட்சிக்கு சாதகமானது. 2007-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க காரணமான நபர்களில் ஒருவரான கல்யாண்சிங்குடன் முலாயம் சிங் கூட்டுவைத்தது முஸ்லிம்களை சமாஜ்வாதி கட்சியை விட்டும் அகற்றியிருந்தது. ஆனால், தவறுகளை ஒப்புக்கொண்டு திரும்பிவந்த முலாயம் சிங்கை முஸ்லிம்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து பீஸ்பார்டி போன்ற கட்சிகள் களமிறங்கிய போதும் வாக்காளர்களின் உள்ளங்களில் சலனங்களை ஏற்படுத்த முடியவில்லை.
உ.பியில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவற்றில் பெரும்பாலான வாக்குகளை தங்களின் பக்கம் திருப்ப சமாஜ்வாதி கட்சியால் முடிந்துள்ளது. என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லிம் ஆதரவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. முஸ்லிம் வாக்குகளை நம்பியிருந்த காங்கிரஸ் கட்சிக்கு போதுமான ஆதாயத்தை பெற இயலவில்லை. அத்துடன் முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து சர்ச்சையை கிளப்பி, ஹிந்து உணர்வுகளை தூண்டிவிட்டு வாக்குகளாக மாற்றும் பா.ஜ.கவின் தந்திரங்கள் பலிக்கவில்லை. வாக்குறுதிகளை அள்ளி வீசினால் முஸ்லிம் வாக்காளர்களை கவர்ந்துவிடலாம் என்று கனவு கண்ட பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் செப்படி வித்தைகள் செல்லுபடியாகவில்லை.
83 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தது. தேர்தலுக்கு சற்று முன்பு முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானம் முஸ்லிம்களின் உள்ளங்களில் அனுதாபத்தை பெற்றுத்தரும் என காங்கிரஸ் கட்சி கருதியது.
சல்மான் குர்ஷிதும், பேனி பிரசாத் வர்மாவும் நடத்திய சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சுக்களும் ஆதரவாக மாறும் என்று காங்கிரஸ் கட்சி கருதியது. மேற்கு உ.பியில் சில தொகுதிகளை தவிர உ.பியின் இதர தொகுதிகளில் எவ்வித மாற்றத்தையும் இந்த வாக்குறுதிகள் ஏற்படுத்தவில்லை.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக காணப்படும் 140 தொகுதிகளில் 72 இடங்களில் சமாஜ்வாடி கட்சிதான் வென்றுள்ளது.
முஸ்லீம்கள் அதிகமுள்ள இடங்களில் இரண்டாவது அதிகபட்ச இடங்களைப் பிடித்துள்ளது மாயாவதி. அவரது கட்சி 27 இடங்களில் வென்றுள்ளது.
காங்கிரஸ் வெறும் 11 இடங்களில்தான் வென்றுள்ளது. இதன்மூலம் காங்கிரஸை முஸ்லீம்களும் கைவிட்டுவிட்டது தெளிவாகிறது.