புதுடெல்லி : இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் டெல்லி போலீஸ் கைது செய்துள்ள பிரபல பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது கஸ்மியை கஸ்டடியில் சித்திரவதை செய்யக்கூடாது என்றும், உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி, இண்டர்நேசனல் ஃபெடரேசன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் ப்ரோக்ராம் மேனேஜர் முரளீதரன், ஸஈத் நக்வி, சீமா முஸ்தஃபா ஆகியோர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இக்கோரிக்கையை விடுத்தனர்.
கஸ்மியின் கைதின் பின்னணியில் உள்நாட்டு, சர்வதேச கரங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. இதன் எதிர்விளைவு கடுமையாக இருக்கும் என்று முரளீதரன் கூறினார். ஆதாரங்களை ஜோடிப்பது உள்ளிட்ட காரியங்களில் வல்லுநர்களான டெல்லி போலீஸ் ஸ்பெஷல் பிரிவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
கஸ்மியின் கைது ஏற்கனவே பீதிவயப்பட்டிருக்கும் குடிமக்களை மேலும் அச்சமூட்டுவதாக அமைந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் சீமா முஸ்தஃபா கூறினார்.
டெல்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கஸ்மியை டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் அந்நியரைப் போல சித்தரிக்கின்றன. இதனை நியாயப்படுத்த முடியாது.
குண்டுவெடிப்பில் ஈரானுக்கு தொடர்பில்லை என்ற அடிப்படையில் துவக்கத்தில் அறிக்கைகளை வெளியிட்ட அரசு பின்னர் ஏன் தனது பழைய நிலைப்பாட்டை மாற்றியது என அவர் கேள்வி எழுப்பினார். கஸ்மியை நிபந்தனையின்றி விடுவிக்க போலீஸ் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தனது தந்தையை சந்திக்கும்போது அவர் மனோரீதியாக சித்திரவதைச் செய்யப்பட்டது அவரின் முகத்தில் இருந்து தெரியவந்தது என்று கஸ்மியின் மகன் ஷவ்ஸாப் கஸ்மி கூறினார்.
மேற்காசிய விவகாரங்களில் நிபுணரான கஸ்மியின் குரலை ஒடுக்கவும், இவ்விவகாரங்களில் இந்தியாவில் இருந்து எழும் குரல்களை ஒடுக்கவும் சர்வதேச அளவில் நடைபெற்ற சதித்திட்டம்தான் கஸ்மி கைதின் பின்னணி என்று மூத்த பத்திரிகையாளர் ஸயீத் நக்வி கூறினார். இதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்தின் மீதான அத்துமீறலை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.