வாஷிங்டன் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் தலைமையில் நரேந்திர மோடியை எதிர்த்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக நடந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்ஹாட்டனில் காந்தி சிலைக்கு அருகே திரண்ட இந்தியர்கள் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.போராட்டத்தில் கலந்துகொண்டோர் இனப்படுகொலையில் கொலை செய்யப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட சவுத் ஏசியா சோலிடாரிட்டி மூவ்மெண்டின் பிரதிநிதி ஸ்வாதி ஷா கூறியதாவது: ‘குஜராத்தில் என்ன நடந்தது என்பதை மக்களிடம் கூறும் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது குறித்து அமெரிக்க இந்திய சமூகம் கவலை கொள்கிறது என்று தெரிவித்தார்.
இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் தலைமையில் இந்த கண்டன போராட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரஸ் மோடியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.