புதுடெல்லி: இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது இஃப்திகார் கிலானிக்கு மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சமமான வழக்காகும் என்றும், சில தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் போலீஸ் கஸ்மியை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் தலைமையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.
ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் யூனியன் புகார் மனுவை அளித்துள்ளது. கஸ்மிக்காக கடைசிவரை போராடுவோம் என்று பத்திரிகையாளர்கள் யூனியன் அறிவித்துள்ளது.
கஸ்மியின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு பதிவுச் செய்தது போலவே உங்கள் ஒவ்வொருவர் மீதும் வழக்கு பதிவுச் செய்யப்படும் என்று இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் நக்வி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். இன்று நாம் எதிர்க்காவிட்டால் நாளை உங்கள் ஒவ்வொருவரையும் தேடி அவர்கள் வருவார்கள் என்று மார்டின் நீமுல்லரின் பிரசித்திப் பெற்ற கவிதையை மேற்கோள்காட்டி நக்வி கூறினார்.
ஈரான் செய்தி நிறுவனமான இர்னாவுக்காக பணியாற்றிய கஸ்மி, ஈரானுக்கு தொலைபேசியில் பேசியதில் என்ன தவறு உள்ளது? என்று நக்வி கேள்வி எழுப்பினார். குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் கஸ்மி சிரியாவுக்கு சென்றார் என்பது போலீஸாரின் இன்னொரு குற்றச்சாட்டாகும்.
சி.என்.என் – ஐ.பி.என் ரிப்போர்டர் முதல் நாட்டின் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் எல்லாம் சிரியாவில் நிலவும் அரசியல் சூழல்களை குறித்து செய்தி சேகரிக்க அவ்வேளையில் அங்கு சென்றிருந்தனர். கஸ்மியை கைது செய்ய உத்தரபிரதேச தேர்தல் முடியும் வரை காத்திருந்ததிலும் அரசியல் உள்ளது என்று நக்வி கூறினார்.
அண்மையில் இந்தியாவில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என்பது நிரூபணமாகியுள்ளது என்று நக்வி கூறினார்.
முஸ்லிம், ஷியா, ஈரான் செய்தி நிறுவனத்திற்காக எழுதுவதால் கஸ்மி பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார் என்று டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன் பொதுச் செயலாளர் எஸ்.கே.பாண்டே கூறினார்.
பத்திரிகையாளர்கள் இவ்வாறு பலிகடாவாக மாற்றப்படுவது கஷ்மீரில் நடந்துவருகிறது. இந்த பாணியை நாட்டின் தலைநகரில் தொடருவதை அனுமதிக்க முடியாது. இஃப்திகார் ஜிலானி வழக்கில் போராடியது போல கஸ்மிக்காகவும் போராடுவோம். பத்திரிகையாளர்களுக்கு எதிராக அத்துமீறல்கள் நடக்கும் வேளையில் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்று பாண்டே கூறினார். கஸ்மியின் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என்று பாண்டே கூறினார்.
கஸ்மி மரியாதைக்குரிய, நேர்மையான பத்திரிகையாளர் ஆவார் என்று பத்திரிகையாளர்கள் யூனியன் போலீஸ் கமிஷனருக்கு அளித்த புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை வெட்ககேடான எந்த செயலையும் கஸ்மி செய்யவில்லை. பி.ஐ.பி அக்ரெடிட்டேசனுக்காக அவருக்கு செக்யூரிட்டி க்ளியரன்ஸ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம் ஆகும். இத்தகைய ஒரு நபர் மீது சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத்தை பிரயோகிப்பதை அங்கீகரிக்க முடியாது. விசாரணை முடியும் வரையிலாவது அவர் மீது சுமத்தப்பட இச்சட்டத்தை வாபஸ் பெற்று ஜாமீன் வழங்கவேண்டும்.
கஸ்மி விசாரணைக்கு ஒத்துழைப்பதால் விசாரணைச்செய்ய தொடர்ச்சியாக வரை கஸ்டடியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். விரைவில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க வேண்டும். ஊடகங்கள் விசாரணை என்ற பெயரால் ஊகங்களை பரப்பக்கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யூனியன் கேட்டுக்கொண்டுள்ளது.
அதனிடையே, “எனது தந்தை உங்களில் ஒருவராக திகழ்ந்தார். அவர் ஒரு தவறும் செய்யவில்லை. நீங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்கவேண்டும்.” என்று டெல்லி ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசும்பொழுது ஸய்யித் கஸ்மியின் மகன் ஷவ்ஸாப் கஸ்மி கண்ணீர் விட்டு அழுதார்.
தனது தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுவது பொய் என்றும், தனது தந்தை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஷவ்ஸாப் கூறினார். கைது செய்த பிறகு தனது தந்தையின் லேப்டாப் உள்பட அனைத்து ஆவணங்களையும் போலீஸ் எடுத்துச் சென்றுள்ளதாகவும், தந்தை நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு ஆவணம் கூட மீதமில்லை என்றும் எம்.பி.ஏ பட்டதாரியான ஷவ்ஸாப் கூறினார்.
“எனது தந்தை ஈரான் செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றினார். அது தொடர்பாக ஈரானுக்கு தொலைபேசியில் அழைப்பார். அதன் பொருள் பயங்கரவாதி என்பதா? எனது தந்தைக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.” என்றும் ஷவ்ஸாப் கூறினார்.