சென்னை : சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த விரைவு பாசஞ்சர் ரயில் மோதி பெரிய விபத்து நேரிட்டது.
நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ஐந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இதில், நின்று கொண்டிருந்த ரயிலின் கார்டும், மோதிய ரயிலின் டிரைவர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அரக்கோணத்திலிருந்து காட்பாடி செல்லும் பாசஞ்சர் ரயில் சிக்னலுக்காக சித்தேரி ரயில் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தது. சிக்னல் கிடைத்ததும் அது மெதுவாக நகரத் தொடங்கியது, அப்போது சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் விரைவு பாசஞ்சர் ரயில் அதே பாதையில் வேகமாக வந்து முன் ரயில் மீது மோதியது. இதில் முன் ரயிலின் 5 பெட்டிகளும் பின்னால் வந்த ரயிலின் 3 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. கவிழ்ந்து கிடக்கும் 3 பெட்டிகளிலும் பல பயணிகள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க சென்னையிலிருந்தும் அரக்கோணத்திலிருந்தும் ரயில்வே மீட்புப் படையினர் விரைந்தனர்.
மெட்டல் கட்டர்களை வைத்து பெட்டிகளை வெட்டி பயணிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தால் அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.