டெல்லி : குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அவரை பாஜக தேசியத் தலைவராக்கவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் நரேந்திர மோடி தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்த தடை விலகி விட்டதாக பாஜக கருதுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அவரை கட்சியின் தலைவராக்கிவிட அவரது ஆதரவாளர்களாக ஒரு பிரிவு பாஜகவினர் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.இதற்கிடையே குஜராத் சட்டசபையின் பதவி காலமும் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. நரேந்திர மோடி மீது குஜராத் கலவர வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்படுகிறது.
மேலும் தற்போதைய பாஜக தலைவர் நிதின் கட்காரியின் 3 ஆண்டு பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் மோடியை தலைவராக்கி அவரை முழு அளவில் தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜகவில் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக அருண் ஜெட்லி உள்ளிட்ட சில மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் ஆகியவற்றின் ஆதரவு நரேந்திர மோடிக்கு உள்ளது.