புதுடெல்லி : குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு குல்பர்க் பகுதியில் நடந்த கலவரத்தை தடுக்க முதல்வர் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குல்பர்க் பகுதியில் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.இஹ்ஷான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கலவரக்காரர்களால் கொடூரமாக கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காததுதான் வன்முறை பரவியதற்கு காரணமாக அமைந்தது.இந்த விவகாரத்தில் மோடி உள்ளிட்டோரை விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், குல்பர்க் பகுதியை கலவரக்காரர்கள் சுற்றி வளைத்ததும், முதல்வர் மோடி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் தனது கணவர் போனில் புகார் செய்ததாகவும், மோடி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் 69 பேர் கொல்லப்பட்டதாகவும் ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த புகார் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் ராஜு ராமச்சந்திரன் ஆய்வு செய்து ஒரு அறிக்கை கொடுத்தார். அவ்வறிக்கையில் புலனாய்வுக்குழுவின் அறிக்கையில் பல முரண்பாடுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இரு அறிக்கைகளையும் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் பரிசீலித்தது.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் நேற்று கூறுகையில், கலவரத்தை கட்டுப்படுத்த மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரில் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது.
இது தொடர்பான அறிக்கையை அகமதாபாத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பிக்க வேண்டும். மோடி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விசாரணை நீதிமன்ற நீதிபதி முடிவு செய்வார். மோடியிடம் விசாரணை தேவையில்லை என்று முடிவு செய்தால், ஜாக்யா ஜாஃப்ரியின் மனுவை மாஜிஸ்திரேட் விசாரிக்க வேண்டும். இந்த புகார் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இனிமேல் கண்காணிக்காது என்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மோடிக்கு கிடைத்த வெற்றியாக பாஜகவினரும், சங்பரிவாரும் கருதுகின்றனர்.