லோக்பால் பிரச்சனை குறித்து அண்மையில் டெல்லியைச் சுற்றி நிகழ்ந்தவை மக்களின் வெற்றி என்றும் அன்னா ஹசாரேயின் அணியால் நிகழ்த்தப்பட்டவை என்றும் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்க சூழல்களில் வாழ்ந்து கொண்டிக்கும் ‘வெகுமக்களில்’ பெரும்பான்மையினர், வெற்றிபெற்ற குழு கூறிக்கொண்டிருப்பது போல இன்னும் “குடிமைச் சமூகத்தின்” பகுதியாக இல்லை.
அதனால், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளப்படும் இயக்கம் பல பரிமாணக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் அதை நவீன மனுவாத முடியரசு எதேச்சாதிகரத்தின் வெற்றி என்று காண்கிறேன். நவீன முடியரசின் எழுச்சியைக் கொண்டாட மனுவின் நவீன சீடர்கள் காந்தி குல்லாவினால் அலங்கரித்துக் கொண்டு ராமலீலா மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.
அதனால், ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்று கூறிக்கொள்ளப்படும் இயக்கம் பல பரிமாணக் கண்ணோட்டத்திலிருந்து பரிசீலிக்கப்பட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் அதை நவீன மனுவாத முடியரசு எதேச்சாதிகரத்தின் வெற்றி என்று காண்கிறேன். நவீன முடியரசின் எழுச்சியைக் கொண்டாட மனுவின் நவீன சீடர்கள் காந்தி குல்லாவினால் அலங்கரித்துக் கொண்டு ராமலீலா மைதானத்திற்குள் நுழைந்தார்கள்.
21 ஆம் நூற்றாண்டின் சமூக “முடியரசர்” ஊழலின் எதிரியாக மைதானத்தில் நுழைந்தார், ஆனால் அவர் அரசியல் சட்டத்தை ஒதுக்கித் தள்ளவும் (அது ஒரு தலித்தின் தலைமையில் வரைவுசெய்யப்பட்டதால் இருக்கலாம்) வர்ணாசிரம தர்மத்தின் வடிவில் நூற்றாண்டுகளாக நிலவி வந்த பாசிச சமூகக் கட்டமைப்புக்களைக் கலைக்க வந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை தூக்கி எறியவும் முயற்சி செய்தார். வந்தே மாதரம் அதன் முழக்கமாகவும் தேசியக் கொடி (அதன் சொந்தக் கொடி அல்ல) அதன் தெரு அதிகாரத்தின் அடையாளமாகவும் இருந்தது.
சமூகப் பாசிசம் தனக்குத் தானே ஒரு ஒழுக்க அடிப்படையை கட்டமைத்துக் கொள்ளும் குடிமைச் சமுதாயத்தின் உண்மை நிலையாக ஆகிறது. தன்னைச் சுற்றிலும் ஒரு பலமான சாதிக்கோட்டையை எழுப்பிக்கொண்டுள்ள இந்தியாவுடையதைப் போன்ற ஒரு நடுத்தர வர்க்கம், ஒழுக்கமானது அதன் சொந்த நலன்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அது அன்றாடம் ஊழல் நடவடிக்கைகளால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாலும், ஊழல் என்பது பொதுவாக அதன் அன்றாட பஜனையில் கண்டனத்திற்கான நாகரீகச் சொல்லாக ஆகிறது. எடுத்துக்காட்டாக, நடுத்தரவர்க்க அரசாங்க அல்லது அரசாங்கம் சாரா நிறுவன அதிகாரி ஒரு லட்சம் ரூபாய்கள் அல்லது அதற்கு மேலாக ஊதியமாகவும் மேலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை கவுரவ ஊதியமாகவும் அமர்வுக் கட்டணமாகவும் பெற்றுக் கொள்வதற்குத் தயங்குவதில்லை, ஆனால் அதே நபர் மாதம் ரூ.5000/- ஊதியம் வாங்கும் ஒரு கடைநிலை ஊழியரை கூடுதல் வேலைக்காக ரூ.200 கேட்டால் ஊழல்வாதியாக நடத்துகிறார்.
ஊழல் எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்கும் குடிமைச் சமுதாயம், கார்பரேட் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை லஞ்சமாக கொடுப்பதை ஊழலாகப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ அரசாங்க அதிகாரியோ லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டால் அது ஊழலாகப் பார்க்கப்படுகிறது. இது ஏனென்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் “அவாளின்” கரங்களில் இருக்கின்றன. அதேவேளையில் அரசியல் மற்றும் அதிகாரப் பதவிகள் “பிறவிலேயே ஊழல்வாதிகளாக உள்ள” மனிதர்களின் கரங்களுக்கு நழுவிச் செல்லுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை எடுத்தக் கொள்வோம். அவர்கள் ஊழல்வாதிகளாக நடத்தப்படுகிறார்கள், ஆனால் லஞ்சம் கொடுக்கும் கார்பரேட் நிறுவனங்கள் மிக மலிவான விலைகளில் மிகப்பெரிய ஒப்பந்தங்களை தட்டிக்கொண்டு போவதை ஊழலாகக் கருதுவதில்லை. அதே கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது ஊடகங்களும் ஊழலுக்கு எதிராகப் போராட 'காந்திக் குல்லாய் குடிமைச் சமூகத்தை' மைதானங்களில் திரட்டுகின்றன.
எந்த நீதியுமற்ற முதலாளித்துவ சந்தையில், ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களில் அதிகநேரம் இடம்பிடிப்பவர்கள், தங்களைத் தாங்களே தூய்மையானவர்களாகக் காட்ட முடியும். அதே ஊடகங்கள் அவர்கள் விரும்பும் வகையில் ஊழலை வரையறுக்க கும்பலைத் திரட்டுவதற்கும் பயன்படுகின்றன. ஊழலை வரையறுக்கும் வேறு எந்த முறைமையும் படிப்பறிவற்ற சொல்லலங்காரமாக நடத்தப்படுகின்றன.
வந்தே மாதரம் என்ற மந்திரம் குடிமைச் சமுதாயத்திற்கு அதிகாரமளிக்கும் என்றால், அதே மந்திரம் ஏழைகளின் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் குறிப்பாக இந்தியாவின் முஸ்லிம்களுக்கும் வாழ்க்கையைத் தரக்கூடிய ஜனநாயக நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்யும் சக்தியையும் கொண்டிருக்கிறது.
இந்து நடுத்தரவர்க்கம் நின்று கொண்டிருக்கும் உயர்ந்த ஒழுக்க அடித்தளம் சமூக பாசிசதிற்கான பிறப்பிடம் ஆகும்.
ஏழைகளும் தாழ்த்தப்பட்ட சாதியினரும் கடந்த இருப்பது ஆண்டுகளாக காவியுடை சமூக பாசிஸ்டுகளைத் தடுத்து நிறுத்த பெரும் போராட்டங்களை நடத்தி வந்தருக்கின்றனர். இப்பொழுது அதே பாசிசசக்திகள் காந்தி குல்லாயை அணிந்து கொண்டு அதிகார மையத்தைக் கைப்பற்ற வந்திருக்கின்றன. காந்தி குல்லாயுடன் ராம்லீலா மைதானத்திற்கு வந்த அனைவரும், காந்தி உடையணிந்த முறைகளைப் பின்பற்றி, தங்கள் குழந்தைகளை உடை அணியச் செய்து பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் கோட்டும் பூட்டும் அணிவித்து மகிழ்வார்கள், அந்தக் குழந்தைகள் செயின்ட் மேரி, செயின்ட் பீட்டர் பள்ளிகளுக்கு செல்வார்கள், மகாத்மா காந்தி அல்லது அன்னா ஹசாரெ பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். ஊழல் என்பது வெறும் ஒரு பொருளாதார நடைமுறை மட்டுமல்ல, அது கலாச்சார நடைமுறையும் ஆகும். அத்தகைய ஒரு இணைப்பு இருந்தாலும், சமூகப் பாசிசம் அந்த இணைப்புக் கண்ணியை நாம் காணக் கூடாது என்று விரும்புகிறது.
சமூகப் பாசிசம் எப்போதும் மோசடித் தன்மையிலேயே வாழ்கிறது. அது சமஸ்கிருதத்தை அதன் ஆலய மொழியாகப் பயன்படுத்துகிறது. இந்தியை மைதானப் பேச்சுக்கு வைத்துக்கொள்கிறது, ஆங்கிலத்தை அதன் அலுவலக மொழியாகப் பயன்படுத்துகிறது. பாசாங்குத்தனம் அதன் உள்ளார்ந்த கலாச்சார இருத்தலாக இருக்கிறது. அது பொது வாழ்க்கையில் எளிமையாக இருப்பதாக நடிக்கிறது, ஆனல அதன் உணவு மேசையில் முத்திரைப் பெயர்களுடன் கார்பரேட் சந்தை வழங்கும் அனைத்துப் பணடங்களையும் வைத்திருக்கிறது.
இந்திய கார்பரேட் நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவை என்று அன்னா ஹசாரே அணி எண்ணுவதில்லை ஏனென்றல் அவை அவர்களைக் காந்தியின் புதிய அவதாரத்தில் வந்த போர்வீரர்களாக காட்டுவதற்கான தொலைகாட்சி ஒளிப்படக் கருவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமூகப் பாசிச சித்தாந்தம் ஊழலை ஒருவழிச் செயல்முறையாகக் காட்டுகிறது.
இந்தியச் சூழலில் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கும் பணம் சென்று சேரும் எந்த ஒரு செயல்முறையும் ஊழல் அல்லது பொருளாதார வீணடித்தலாகக் காட்டப்படுகிறது. ஆனால் அரசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் மிகப்பெரிய லாபத்தை ஈட்டும் ஏகபோக வர்த்தகர்கள் சந்தை விலையை உயர்த்தும் போது அது ஊழலாக கருதப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக, ஊழல் எதிர்ப்பு படையணியில் சேர்ந்துகொண்டுள்ள அனைத்து பாலிவுட் நாயகர்கள், நாயகியர்களில் பெரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்களே. மக்களிடையே சமத்துவத்தை நிறுவுவதற்கான உள்ளாற்றல் கொண்ட அல்லது குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட வெகுமக்களின் அடிப்படை வாழ்க்கையை மாற்றுகிற நிகழ்ச்சிநிரல்கள் தேசிய உரையாடலில் இருக்கவே தேவையில்லை என்று அன்னா ஹசாரெ அணி நம்புகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுநிலையை கட்டுப்படுத்தி, சூழ்ச்சித் திறம் மேற்கொண்டுவந்த பாரதமாதாவின் தோற்றத்தில் தேசம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் பிறர் அதைக் கண்டாலே நடுங்கச் செய்கிற வகையில் அந்தத் தோற்றம் ஒவ்வொரு நிமிடமும், 24x 7, காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாசிசம் இப்பொழுது அனைத்து வசதிகளும் நிறைந்த வீடுகளில் வாழ்கிறது, ஜனநாயகம் கொட்டடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
சமூகப் பாசிசம், சமுதாயத்தின் சாதிஅடுக்கு நிலையை இயற்கையானதாகக் கருதுகிறது. அரசால் அல்லது ஒரு குடிமைச் சமுதாய அமைப்பால் முன்வைக்கப்படும் எந்த ஒரு பொருளாதார மறுவிநியோக அமைப்புமுறையும் ஊழலாகவும் நெறிமுறைக்கு மாறானதாகவும் காட்டப்படுகிறது.
இந்த ஆதிக்கசாதி நடுத்தரவர்க்கத்தின் மூக்குக்கண்ணாடி வழியே ஊழல் காணப்படும் போது, அதற்கு ஒரு சட்டத் தீர்வு இருக்கிறதாகவும் அந்த சட்டமுறை அதன் சொந்த நிபந்தனைகளால் உருவாக்கபடுகின்றன என்றும் அவர்களுக்குத் தோன்றுகிறது. ஒடுக்குபவரின் தர்மம் எப்போதும் ஒடுக்கப்படுவோரின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது என்பதை அது புரிந்து கொள்ள விரும்புவதில்லை.
ஒரு தேசம் ஒழுக்க நம்பிக்கையின் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிற போது சமூக பாசிசம் தோன்றுகிறது. அது குடிமைச் சமுதாயத்தின் அடுக்குகளில் தன்னை உருவாக்கிக்கொண்டு அரசியல் அதிகாரத்தின் வாயிலை ஆக்கிரமித்துக் கொள்வதை நோக்கி நகர்கிறது. இது ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகளில் நிகழ்ந்தது. சமூக பாசிசம் வெற்றிகரமாகத் தோன்றிய அனைத்து நாடுகளிலும் அது தனக்கான ஒரு உயர்ந்த ஒழுக்க அடித்தளத்தை வலியுறுத்தும் நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான் பரவியது. அந்த உயர்ந்த ஒழுக்க அடித்தளம் பொதுவாக ஊழல்மறுப்பு கோட்பாட்டைச் சுற்றிதான் நிறுவப்படுகிறது.
காஞ்சா அய்லைய்யா (http://www.asianage.com/columnists/anna-s-social-fascism-579)
தமிழில்: வெண்மணி அரிநரன்
தமிழில்: வெண்மணி அரிநரன்