விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளான இன்று பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. மதுரையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மேலும் வன்முறை பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அரசு பயங்கரவாத அடக்குமுறைப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை இன்று காலை சுமார் 10 மணியளவில் வல்லநாடு அருகே காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துள்ளனர். காரணம் கேட்டால், ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் வன்முறை உருவாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், ஜான்பாண்டியன் பரமக்குடிக்கு செல்லாமலேயே மிகப் பெரிய வன்முறை காவல்துறையால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அப்பாவி இளைஞர்கள் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அஞ்சலி செலுத்துவற்கான அனுமதியை ஏற்கனவே வழங்கியிருந்த காவல்துறை, திடீரென அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு போட என்ன காரணம்? பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கே கூடியிருக்கும் வேளையில் ஒரு சமூகத் தலைவரை அங்கே செல்லவிடாமல் தடுப்பது அப்பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பது காவல்துறையினருக்கு தெரியாதா?
பரமக்குடி அருகே பழனிக்குமார் என்கிற பள்ளி மாணவன் ஒருவனை காரண காரியமில்லாமலேயே சாதிவெறிக் கும்பல் படுகொலை செய்துள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அக்கரை காட்டாத காவல்துறை, அப்பகுதிக்கு ஜான்பாண்டியன் செல்லக்கூடாது என்று தொலைபேசி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவரும் உடன்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் அவர் அப்பகுதிக்கு வந்தால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதுல் சொல்வதற்காகச் செல்லக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டு பரமக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கே வரக்கூடாது எனத் தடை விதித்து, அவரைக் கைது செய்து, அதன் மூலம் ஒரு பதற்றத்தை உருவாக்கி, தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று சாக்குப்போக்குச் சொல்லி அப்பாவி இளைஞர்களைப் படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
எனவே இந்த வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணமான தவறான முடிவுகளை எடுத்த காவல்துறை அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படுகொலையானவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கமாக இவ்வாறான வன்முறைகளின்போது உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலும் வழங்கி வந்துள்ளது. ஆனால், தற்போது தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கியிருப்பது தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுவதாகவே கருத நேரிடுகிறது. ஆகவே தமிழக அரசு தம்முடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அக்குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும், அக்குடும்பங்களில் தகுதியுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதியளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனையும் அவருடன் கைதானவர்களையும் உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.