புதுதில்லி:ஒரு கொசுவர்த்திச் சுருள் உமிழும் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்குச் சமமானது என்றும், இது இந்தியாவில் ஏராளமானோரைப் பாதிக்கிறது என்றும் ஒரு நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
“நிறைய மக்களுக்கு இது தெரிவதில்லை. ஆனால் ஒரு கொசுவர்த்திச் சுருள் உங்கள் நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு 100 சிகரெட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஈடானது. இது சமீபத்தில் மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று நெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் (Chest Research Foundation) இயக்குனர் சந்தீப் சால்வி கூறினார்.
அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment), மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு (Indian Council for Medical Research), இந்திய மருத்துவர் சங்கம் (Indian Medical Association) ஆகிய அமைப்புகள் இணைந்து “காற்று மாசுபடுதலும், நமது உடல்நலமும்” (Air Pollution and Our Health) என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் பேசும்பொழுதுதான் சந்தீப் சால்வி இந்த அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபடுதலினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளதாக அவர் கூறினார்.
நமது இந்திய மருத்துவர்களிடம் “ஆராய்ச்சி கலாச்சாரம்” மிகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உள்ளரங்க காற்று மாசுவும் உடல்நலத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கக் கூடியது என்று கூறினார்.
இந்த மாநாட்டில் மருத்துவர்களும், உடல்நல ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் பேசும்பொழுது தலைநகர் புதுதில்லியில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு பற்றி குறிப்பிட்டனர். ஆய்வுகளின்படி டெல்லி மக்கள்தொகையில் 55 சதவீதம் பேர் முக்கிய சாலைகளுக்கு 500 மீட்டர் தள்ளியே வசிக்கின்றனர். ஆதலால் இவர்களுக்கு நிறைய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றனர்.