சென்னை : தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிகிறது.
முதல் கட்டத் தேர்தலை அக்டோபர் 19-ம் தேதயும், இரண்டாம் கட்டத் தேர்தலை அக்டோபர் 22ம் தேதியும் நடத்தப்படலாம் என்று மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அக்டோபர் 24ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்தாக வேண்டும்.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இதன் பிறகே தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்கு 58 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே இந்தத் தேர்தலில் நகர்ப் பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தையும், கிராமப் பகுதிகளில் ஓட்டுச் சீட்டுகளையும் பயன்படுத்தவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்தும் மாநிலம் தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.