கடையநல்லூர் : கடையநல்லூர் பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முத்துசாமி உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடகிருஷ்ணன்,ஜெய்மனோகர் ஆகியோர் கடையநல்லூர் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றது, ஷேர் ஆட்டோக்கள் போல் தனித்தனியாக டிக்கெட் வசூலித்துப் பயணிகளை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட பல்வேறு அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற ஆய்வு நடவடிக்கைகள் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முத்துசாமி தெரிவித்தார்.