நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 5 செப்டம்பர், 2011

ஹெட்லி.. 'நாங்க சும்மா சத்தம் போடுவோம்'.. எம்.கே.நாராயணனை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் கோருவது ஒரு கண்துடைப்பு நாடகம் தான் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறிய விவரத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

நேரு குடும்பத்துக்கு மிக நெருக்கமான நாராயணன், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் மிக முக்கியப் பொறுப்புகளில் இருப்பார். இன்டலிஜென்ஸ் பீரோவின் இயக்குனராகவும் இருந்துள்ள இவர், 2004ம் ஆண்டிலிருந்து பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார்.

இலங்கை விவகாரத்தில் நேரு குடும்பத்திடம் நற்பெயர் பெற இலங்கை அரசு நடத்திய அப்பாவித் தமிழர்களின் படுகொலைகளையும் மீறி அந்த நாட்டுக்கு மத்திய அரசு உதவ முக்கிய காரணமாக விளங்கியவர் என்று தமிழர் அமைப்புகள் இவர் மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வருகின்றன.

சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் படித்த பாலக்காட்டைச் சேர்ந்த நாராயணன் இப்போது மேற்கு வங்க ஆளுநராக உள்ளார்.

இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தபோது தான் மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரி வந்தது.

ஆனால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அவரை ஒப்படைக்குமாறு நெருக்கடி தர வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் கூறியதாகவும், அதற்கு எம்.கே.நாராயணன், நாங்களும் உண்மையில் ஹெட்லியை எங்களிடம் தர வேண்டும் என்று நெருக்கவில்லை. நாங்கள் அப்படி கோருவது போல நடிக்கிறோம் என்று கூறிய விவரதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த திமோதி ரோமர் வாஷிங்டனில் உள்ள தனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய கேபிள் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்த ரகசிய செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்காவில் பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாக வற்புறுத்தினாலும் அதில் எங்களுக்கு உண்மையில் அக்கறை இல்லை. ஆனால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் கேட்பது போல வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், இந்தக் கோரிக்கைகளை வைத்து வருகிறோம் என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அனுப்பியுள்ள இன்னொரு கேபிளில், காஷ்மீர் தொடர்பான கொள்கையில் நாராயணனின் பங்கு பழைமைவாதம் மற்றும் ஆதிக்கமனப்பான்மை கொண்டதாக இருந்தது. அவ்வப்போது முட்டுக்கட்டையாகவும் அவர் செயல்பட்டு வந்தார். நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதன் மூலம், முற்போக்கு சிந்தனை கொண்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காஷ்மீர் பிரச்சனையில் கொள்கை முடிவு எடுப்பதில் முக்கிய இடத்திற்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

எம்.கே.நாராயணன் மறுப்பு:
இந் நிலையில் ஹெட்லி விவகாரத்தில் தான் அவ்வாறு கூறவில்லை என்று எம்.கே.நாராயணன் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ஹெட்லி பற்றிய விவரங்களை அறியவும், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தீவிர அக்கறை கொண்டு இருந்ததாகக் கூறியுள்ளார்.

நாராயணனை தேசிய பாதுகாப்புச் செயலாளர் பதவிலிருந்து தூக்கியடித்து மேற்கு வங்க ஆளுநராக்கியதில் ப.சிதம்பரத்துக்கு பெரும் பங்குண்டு என்கிறார்கள் டெல்லியில். உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவியேற்ற பின், உளவுப் பிரிவுகளை கையாளும் விஷயத்தில் தனக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார் சிதம்பரம்.

ஆனால், அவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாராயணன் முயன்றார். இதையடுத்து சிதம்பரம் தனது பலத்தைக் காட்ட வேண்டிய நிலை வந்தது. இதையடுத்தே நாராயணனை ஆளுநர் பதவிக்கு மாற்றியது மத்திய அரசு என்கிறார்கள்.