பெல்லாரி: சுரங்க ஊழல் தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி இன்று காலை சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.
பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் நடந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததில் எதியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ரெட்டி சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன் ரெட்டி வீட்டில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடைய உறவினரும் சுரங்க நிர்வாகியுமான பி.வி.ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகி்யோர் கைது செய்யபப்ட்டனர்.
எதியூரப்பா ஆட்சியில் ஜனார்த்தன் ரெட்டி சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராக இருந்தார். சுரங்க ஊழல் குறித்து கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி சமர்பிக்கப்பட்ட லோக்ஆயுக்தா அறிக்கையில் ஜனார்த்தன் ரெட்டியின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒபுலபுரம் மைனிங் கம்பெனி உரிமையாளர்களில் ஒருவர். அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோருக்கும் இந்த நிறுவனத்தில் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐன் தீவிர கண்காணிப்பில் உள்ள 65 சுரங்க நிறுவனங்களில் ஜனார்த்தன் ரெட்டி நிறுவனமும் ஒன்று.
விரைவில் இவரது சகோதரர்களான மற்ற இரு ரெட்டிகளும், இவர்களது தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவும் கைதாவார்கள் என்றும் தெரிகிறது.