ரியாத் : இவ்வாண்டு ஹஜ்ஜின் அரஃபா தினம் நவம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை என சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் சவூதி அரேபியாவிலும், அண்டை அரபு நாடுகளிலும் ஈதுல் அழ்ஹா என்றழைக்கப்படும் தியாகப்பெருநாள் ஞாயிற்றுக்கிழமையாக அமையும்.
நேற்றைய சூரியன் மறைவுக்கு பிறகு துல்ஹஜ் மாதத்தின் பிறையைக்கண்டதாக ஆதாரப்பூர்வமாக கிடைத்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இன்று ஹஜ் மாதம் துவங்கியதாக சவூதி உச்சநீதிமன்ற தலைவர் ஷேக் அப்துற்றஹ்மான் பின் அப்துல் அஸீஸின் தலைமையிலான பத்து உறுப்பினர்களைக்கொண்ட கவுன்சில் அறிவித்துள்ளது.துல்ஹஜ் 29-ஆம் தேதி நேற்று முடிவடைந்ததையடுத்து புதிய மாத பிறையை கண்டால் அறிவிக்கவேண்டுமென உச்சநீதிமன்றம் முன்னரே மக்களுக்கு அறிவித்திருந்தது.
புனித பயணிகள் சமாதானமாகவும், வசதியாகவும் ஹஜ்ஜை நிறைவேற்றவும், உலக முஸ்லிம்களுக்கு துல்ஹஜ் மாதத்தின் புனித செயல்களை கடைப்பிடிக்கவும் தியாகப்பெருநாளை கொண்டாடவும் வாய்ப்பு கிடைக்கட்டுமாக என உச்சநீதிமன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.