புதுடெல்லி : முஸ்லிம்களில் பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.
முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்(ஒ.பி.சி) உட்படுத்தி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் அறிக்கையில் ஐ.மு அரசு இதனைக்குறித்து வாக்குறுதியளித்துள்ளது.
ரங்கநாத் மிஸ்ரா தனது அறிக்கையை சமர்ப்பித்து பல மாதங்கள் கழிந்தபிறகும் இதுவரை மத்திய அரசு அதனை அமுல்படுத்த தயங்கியே வருகிறது.
இந்நிலையில் உ.பியிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி முஸ்லிம்கள் தரப்பில் கோரிக்கை அதிகரித்துவருவதையடுத்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற முடிவெடுத்துள்ளது.
ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அடியொற்றி முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் சேர்த்து இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசில் இடம்பெற்றிருக்கும் சிலரும் எழுப்பியுள்ளனர். இதுத்தொடர்பான கடிதத்தை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் அனுப்பியுள்ளார்.
ஒ.பி.சி பிரிவினருக்கு அனுமதித்துள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் பலன் கிடைப்பதை உறுதிச்செய்யவேண்டும் என குர்ஷித் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது 1963 பிரிவினருக்கு ஒ.பி.சி இடஒதுக்கீட்டு பலன் கிடைக்கிறது.முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்கிறது.
மொழி-மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனவும், அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கவேண்டுமெனவும் ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரைக்கிறது.ஒ.பி.சியில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கவேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சச்சார் கமிட்டியைத்தொடர்ந்து ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என பரிந்துரைத்ததை தொடர்ந்து முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கான குரல் வலுத்துள்ளது.வருகிற குளிர்கால கூட்டத்தொடரிலேயே இம்மசோதாவை தாக்கல் செய்யவேண்டுமென உ.பியிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.