பெங்களூர் : எல்.கே.அத்வானியின் ஜனசேதனா யாத்திரையையொட்டி இம்மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் நடத்த திட்டமிட்டிருந்த பேரணியை பா.ஜ.க ரத்துச் செய்துள்ளது.
ஊழல் வழக்கில் சிக்கி கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா சிறையில் அடைக்கப்பட்டு மற்றும் சில தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சூழலில் பெங்களூர் பேரணி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 31-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தின் மங்களூர், உடுப்பி, ஹோன்னவாரா ஆகிய கடலோர பிரதேசங்களில் ஜனசேதனா யாத்திரை நடக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நவம்பர் ஒன்றாம் தேதி அங்கோலாவில் பொதுக்கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிலபேர ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டியும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அத்வானியின் யாத்திரையின் புகழை கெடுத்துள்ளது. பெங்களூர் பேரணியை ரத்துச்செய்ய இதுதான் காரணம்.
கர்நாடகா மாநில பா.ஜ.க அரசின் உள்துறை அமைச்சர் ஆர்.அசோகாவின் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தா நீதிமன்றம் போலீஸிற்கு உத்தரவிட்டதும் பா.ஜ.கவை சோர்வடையச் செய்துள்ளது. சட்டத்தை மீறி அசோகா அரசு நிலத்தின் விலைக் குறித்து மறு அறிவிக்கை வெளியிட்டுள்ளார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும்.