புதுடெல்லி : கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகளை குறித்தும், மாநிலத்திலிருந்து காணாமல் போன் ஆயிரக்கணக்கான நபர்களைக்குறித்தும் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு தயாராகவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ்(பி.யு.சி.எல்), பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் டெமோக்ரேடிக் ரைட்ஸ்(பி.யு.டி.ஆர்) ஆகிய அமைப்புகள் இணைந்து டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. குற்றவாளிகள் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவர அரசு தயங்கக்கூடாது என கருத்தரங்கம் கோரிக்கை விடுத்தது.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நாவின் சட்டத்தை அங்கீகரிக்க இந்தியா இனிமேலாவது தயாராகவேண்டும். சித்திரவதை தடுப்பு ஒப்பந்தம் மசோதா-2010இல் திருத்தங்களை அரசு மேற்கொள்ளவேண்டும். அடக்கம் செய்யப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் தீவிரவாதிகளுடையது என அரசு கூறுவதை அங்கீகரிக்க இயலாது.
பத்தாயிரம் பேர் கஷ்மீரில் காணாமல் போன சூழலில் அவர்களை குறித்த தெளிவான விபரங்களை வெளியிடவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. கஷ்மீரின் வேறு சில பகுதிகளிலும் அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக அறிக்கைகள் வெளியான சூழலில் இவ்விவகாரத்தில் வெளிப்படையான விசாரணைக்கு அரசு ஏன் தயாராகவில்லை? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
இக்கருத்தரங்கில் குர்ரம் பர்வேஷ், பரம்ஜித் கவுர் கத்ரா, நித்யா ராமகிருஷ்ணன், உஷா ராமநாதன், நீதிபதி ராஜேந்திர சச்சார், ப்ருந்தா க்ரோவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.