புதுடெல்லி : ஊழலுக்கு எதிராக போராடும் ஹஸாரே குழுவினரில் கிரண்பேடிக்கு அடுத்து முக்கிய உறுப்பினரான அசோக் கேஜ்ரிவால் மீதும் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹஸாரே குழுவில் முன்பு இடம்பெற்றிருந்த சுவாமி அக்னிவேஷ் தற்பொழுது முக்கிய உறுப்பினரான அசோக் கேஜ்ரிவால் ஹஸாரே குழுவிற்கு கிடைத்த 70-80 லட்சம் ரூபாயை தனது அறக்கட்டளைக்கு மாற்றி மோசடிச் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஹஸாரேவின் தலைமையிலான இந்தியா எகைன்ஸ்ட் கரப்ஷனின்(ஐ.எ.சி)க்கு நன்கொடையாக கிடைத்த பெரும் தொகையை அசோக் கெஜ்ரிவால் தனது சொந்த அறக்கட்டளைக்கு மாற்றியதாக சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டும்பொழுது அதற்கான ஆதாரத்தை கொண்டுவர கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்தில் ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்ட வேளையில் ஐ.ஏ.சி அனுதாபிகள் இவ்வளவு பெரும் தொகையை நன்கொடையாக அளித்துள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான பிரச்சாரம் நடத்தும் குழுவினர் மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது என அக்னிவேஷ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.சி பெயரில் ஒரு அக்கவுண்ட் துவங்குவதை வேண்டுமென்றே கேஜ்ரிவால் தாமதப்படுத்தினார். இதுத்தொடர்பாக மத்திய குழுவினரின் கோரிக்கையை புறக்கணித்த கேஜ்ரிவால் தனது சொந்த அறக்கட்டளையான பப்ளிக் காஸ் ரிஸர்ச் ஃபவுண்டேசனுக்கு(பி.சி.ஆர்.எஃப்) பின்னர் அதனை மாற்றினார். ஐ.ஏ.சியின் செயல்பாடுகளை ஆதரிக்கும் மக்களுக்கு செய்த துரோக செயலாகும் இது.
செப்டம்பரில் ரெலேகான் சித்தியில் நடந்த மத்திய குழுவின் கூட்டத்தில் நன்கொடைகளை ஐ.ஏ.சி அக்கவுண்ட வழியாக மட்டுமே பெறவேண்டும் என அறிக்கை விடுத்திருந்தார். குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக ஐ.ஏ.சி அக்கவுண்டை வெளிப்படுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவை கேஜ்ரிவால் கடைப்பிடிக்கவில்லை. இவ்வாறு அக்னிவேஷ் கூறியுள்ளார்.