திருச்சி : பெரம்பலூர் அருகே, சாலை விபத்தில் மரணமடைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீரா, திருச்சி மாநகராட்சியின் துணைமேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்த மரியம்பிச்சை, கடந்த மே மாதம் 23ம் தேதி, பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காலியான மேற்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், பரஞ்ஜோதி வெற்றியும் பெற்றார்.
மறைந்த மரியம்பிச்சை மகன் ஆசிக் மீராவுக்கு, திருச்சி மாநகராட்சியின், 27வது வார்டில் போட்டியிட, அ.தி.மு.க., தலைமை வாய்ப்பளித்தது. தேர்தலில் ஆசிக் மீரா வெற்றி பெற்று, கவுன்சிலராகவும் பதவியேற்றார். திருச்சி மாநகராட்சியின் துணைமேயர் பதவிக்கு கவுன்சிலர்கள் சீனிவாசன், ஆசிக் மீரா ஆகிய இருவரின் பெயரை மாநகர் மாவட்ட செயலர், கட்சித்தலைமைக்கு சிபாரிசு செய்தார். அதை பரிசீலித்த கட்சித்தலைமை, ஆசிக் மீராவை திருச்சி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆசிக் மீராவுக்கு, ஜாகிதா பேகம் என்ற மனைவியும், ஆயிஷா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள, 65 கவுன்சிலர்களில், 42யை அ.தி.மு.க., பெற்றுள்ளதால், துணைமேயர் பதவியை ஆசிக் மீரா பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆகையால், இன்று நடக்கும் துணைமேயர் தேர்தலில் ஆசிக் மீரா போட்டியின்றி தேர்வாகிறார்.