அங்காரா : கிழக்கு துருக்கியில் நிகழ்ந்த கடும் பூகம்பத்தால் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர் என கருதப்படுகிறது.ரிக்டர் அளவுகோலில் 7.3 பதிவாகியுள்ள முதல் பூகம்பத்திற்கு பிறகு ஏராளமான பூகம்பங்கள் நிகழ்ந்தன. உள்ளூர் நேரம் 1.40க்கு முதல் பூகம்பம் நிகழ்ந்தது. தலைநகரான அங்காராவிலிருந்து 1200 கி.மீ தொலைவிலுள்ள வான் மாகாணத்தில் தபன்லி நகரத்தில் பூகம்பம் உருவானது.நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் குர்து மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.
கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்களும், வாகனங்களும், சாலைகளும் தகர்ந்தன.மின்சாரமும், தகவல்தொடர்பும் சீர்குலைந்துள்ளன. அதேவேளையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூகம்பத்தில் பலியானதாக இஸ்தான்புல்லில் கந்தில்லி ஸீஸ்மோலஜிக்கல் இன்ஸ்ட்யூட் இயக்குநர் பேராசிரியர் முஸ்தஃபா எர்திக் அறிவித்துள்ளார்.ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர். பூகம்பத்தைத்தொடர்ந்து கட்டிடங்கள் தகர்ந்துவீழ்ந்து மக்கள் பீதிவயப்பட்டு அங்குமிங்குமாக ஓடும் காட்சிகளை என்.டி.வி வெளியிட்டுள்ளது.பூகம்பத்தை தொடர்ந்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்துச்செய்த பிரதமர் எர்துகான் அப்பகுதிக்கு சென்றார். நகரத்தின் விமானநிலையம் ஓரளவு சேதமடைந்திருந்தாலும் முற்றிலுமாக விமானப்போக்குவரத்து தடையாகவில்லை என செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.ஈரான் எல்லையையொட்டிய எர்ஸிஸ் நகரத்தில்தான் மிக அதிகமான இழப்புகள் பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளன. பூகம்பத்தின் பாதிப்பு வடமேற்கு ஈரானிலும் உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. பொதுவாகவே பூகம்ப வாய்ப்புள்ள பகுதியான துருக்கியின் வடமேற்கு தொழில் நகரத்தில் 1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தில் இருபதினாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.