டமாஸ்கஸ் : அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சிரியா விவகாரத்தில் தலையிட்டால் எதிர்விளைவுகள் அதிர்ச்சிகரமாக இருக்கும் என சிரியாவின் ஏகாதிபத்திய அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் கூறியுள்ளார்.
டெய்லி டெலிக்ராஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:சர்வதேச தலையீடு சிரியாவை மற்றொரு ஆப்கானாக மாற்றும். மோதலை முடிவுக்கு கொண்டுவர என் மீது மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.இதர அரபு நாடுகளிலிருந்து மாறுபட்டதுதான் சிரியாவின் வரலாறும், அரசியலுமாகும்.ஆதலால் மேற்கத்திய நாடுகள் சிரியாவில் தலையிடுவது இப்பிராந்தியம் ஒட்டுமொத்தமாக ஆபத்தில் சிக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் ஹும்ஸ் நகரத்தில் நடந்த ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, நிலைமைகளை குறித்து விவாதிக்க அரபு லீக் இன்று சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.நாட்டில் நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவர எதிர்கட்சியினருக்கும், சிரியா அரசுக்கும் இடையே கருத்தொற்றுமை பேச்சுவார்த்தை நடத்த களம் உருவாக்க அரபு லீக் முயற்சி மேற்கொண்டுள்ளது.