புதுடெல்லி : ஊடகங்கள் முஸ்லிம்களோடு பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியதற்கு எடிட்டர்ஸ் கில்ட்(எடிட்டர்கள் சங்கம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தவறான விமர்சனங்களை கட்ஜு வெளியிட்டுள்ளதாகவும், ப்ரஸ் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றது முதல் கட்ஜு ஊடகங்களுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் குற்றம் சாட்டியுள்ளது.
சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியில் கரண் தாப்பருக்கு அளித்த நேர்முகத்தில் கட்ஜு ஊடகங்களின் பாரபட்சமான போக்கை விளாசிதள்ளினார். ஒரு குண்டுவெடிப்பு நடந்தால் அதன் பொறுப்பை முஸ்லிம்கள் மீது சுமத்த ஊடகங்கள் முயல்வதாக கட்ஜு குற்றம் சாட்டியிருந்தார்.உண்மைகளை ஆராயாமல் காரியங்களை புரிந்துக்கொள்ளாமல் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிடுவதாக கட்ஜு குற்றம் சாட்டினார். தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் அளிக்கக்கூடாது, லைசன்ஸ் ரத்துச்செய்யவேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக சட்டம் இயற்றவேண்டும் என கட்ஜு கூறினார்.
ஆனால் ஊடகங்களை அடக்கும் விதத்தில் ஆட்சேபிக்கும் முறை சரியல்ல என எடிட்டர்ஸ் கில்ட் குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களை அச்சுறுத்துவதற்காக கறுப்புச்சட்டங்களை கொண்டுவருவதை அங்கீகரிக்க இயலாது என கில்ட் தெரிவித்துள்ளது.