டெல்அவீவ் : ஐ.நாவின் விஞ்ஞான, கலாச்சார, கல்வி அமைப்பான யுனெஸ்கோ ஃபலஸ்தீனுக்கு முழுமையான உறுப்பினர் பதவி அளித்ததைத்தொடர்ந்து கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 2000 சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்காலத்தில் இஸ்ரேலுக்கு சொந்தமான பிரதேசங்கள் என உரிமை கோருவதற்கு கிழக்கு ஜெருசலத்திலும், மேற்கு கரையிலும் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட ஃபலஸ்தீன் நாடு என்பது அந்நாட்டு மக்களின் விருப்பமாகும்.இப்பிரதேசத்தில்தான் இஸ்ரேல் முக்கியமாக சட்டவிரோத குடியிருப்புகளை கட்டிவருகிறது. குடியிருப்புகளை கட்டுவதுடன் ஃபலஸ்தீனுக்கு சொந்தமான வரி வருமானத்தை முடக்கவும் இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலின் இந்நடவடிக்கை யுனெஸ்கோவில் ஃபலஸ்தீனுக்கு கிடைத்த உறுப்பினர் பதவிக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகும் என அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்துவதற்கான இஸ்ரேலின் உத்தரவு சமாதான முயற்சிகளுக்கு கேடு விளைவிப்பதாகும் என ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித்தொடர்பாளர் நபீல் அபு ருதைனா தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீன் மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைதான் இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது என அவர் கூறினார். இவ்வாண்டு இரண்டாவது தடவையாக ஃபலஸ்தீன் ஆணையத்தின் பெயரால் வசூலிக்கும் பணத்தை இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது.
இஸ்ரேலின் உத்தரவிற்கு சில ஐரோப்பியநாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலின் தீர்மானம் அமைதிக்கான முயற்சிகளை தகர்ப்பதாகும் என கருத்து தெரிவித்துள்ளன.உத்தரவை வாபஸ் பெற ஐரோப்பிய யூனியனின் கொள்கை உருவாக்க தலைவர் காதரின் அஷ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்புத்துறை பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது. ஆனால், எவ்வகையான ஏவுகணையை சோதனை நடத்தியது என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. மேற்காசியாவில் ஒரே அணு ஆயுத நாடான இஸ்ரேல் கடந்த 2008-ஆம் ஆண்டு அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் ஜெரிகோ ஏவுகணையை சோதனை நடத்தியிருந்தது.