லண்டன் : ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அமெரிக்காவையும், அதன் கூட்டணி நாடுகளை அதிரவைத்த விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்ச் பாலியல் வழக்கில் விசாரணையை சந்திக்க தன்னை ஸீவிடனின் ஒப்படைக்கக்கூடாது என தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச்செய்துள்ளது. கீழ் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார் அவர்.
இரண்டு பெண்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கடந்த டிசம்பரில் அஸாஞ்ச் கைதுச்செய்யப்பட்டார்.பாலியல் வன்புணர்வுக்கு ஒரு குற்றமும், பாலியல் பலாத்கார முயற்சிக்கு இரண்டு குற்றங்கள் உள்பட நான்கு குற்றங்கள் அஸாஞ்ச் மீது சுமத்தப்பட்டது.10 தினங்களுக்குள் அஸாஞ்ச் ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்த நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 14 தினங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அஸாஞ்ச் பிரிட்டன் உச்சநீதிமன்றத்தை அணுகுவார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான வழக்கு அரசியல் தூண்டுதல் எனவும், ஸ்வீடனில் சுதந்திரமான விசாரணை நடைபெறாது எனவும் அஸாஞ்ச் கூறிய வாதத்தை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது.
ஆஸ்திரேலியாவில் பிறந்த அஸாஞ்ச் ஸ்வீடனில் வசிக்கும்போது தங்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என ஸ்வீடனைச்சார்ந்த இரண்டு பெண்கள் புகார் அளித்தனர்.ஆனால் பெண்களுடன் தொடர்பு வைத்தது பரஸ்பர சம்மதத்தின் பெயரில் எனவும், அதனை பாலியல் வன்புணர்வாக சித்தரிப்பது அமெரிக்காவின் நிர்பந்தத்தின் மூலமாகும் என்பது அஸாஞ்சின் வாதமாகும்.
தாங்கள் வெளியிட்ட ஆவணங்கள் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியதால் விக்கிலீக்ஸை ஒழிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.இதன் ஒருபகுதிதான் அஸாஞ்ச் மீதான வழக்கு என விக்கிலீக்ஸ் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.