புதுடெல்லி : இந்தியாவில் மின்னணு ஊடகங்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டுமென அதன் தலைவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ப்ரஸ் கவுன்சிலுக்கு மீடியா கவுன்சில் என பெயரை மாற்றவும், கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கவும் தான் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பரிந்துரைத்துள்ளதாக சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:’நான் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்துவருவதாக பிரதமர் பதிலளித்துள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்கட்சி தலைவர் சுஷ்மார் சுவராஜுடன் கலந்தாலோசித்தேன் .ஊடகங்கள் விளம்பரங்களை நிறுத்தவும், தண்டனைக்குரிய விதத்தில் நடந்துக்கொள்ளும் ஊடகங்களுக்கு லைசன்ஸ் குறிப்பிட்ட கால அளவிற்கு ரத்துச்செய்யவும் அபராதம் விதிக்கவும் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
இந்த கட்டுப்பாடுகள் ஊடக சுதந்திரத்தை பறிப்பது அல்ல. மாறாக ஜனநாயக கட்டமைப்பில் தவறு செய்யும் அனைவரும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காகும். ஊடகங்கள் மக்களுக்காக செயல்படவேண்டும். ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள் பெரும்பாலும் மக்கள் விரோதமாக மாறுகிறது.
இந்தியாவில் எங்கு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தாலும் சில மணிநேரங்களிலேயே சேனல்கள் இந்திய முஜாஹிதீனோ, ஜெய்ஷே முஹம்மதோ, முஸ்லிம் பெயரிட்ட நபரோ குண்டுவெடிப்பிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக அனுப்பியதாக கூறப்படும் இ-மெயில்களையோ, எஸ்.எம்.எஸ் செய்திகளையோ கண்டுபிடிக்கின்றன. இதன் மூலமாக முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற தவறான பிரச்சாரம் நடத்தப்படுகிறது.இ-மெயில்கள் எவராலும் அனுப்ப முடியும்.இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.